பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்வு

பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்தின் குடும்ப உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கு, பணியாற்றிய காலத்துக்கு ஏற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை குடும்ப உதவி நிதி அளிக்கப்பட்டு வந்தது.  இந்த தொகை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உயர்த்தி அளிக்கப்படும்.

 

 

பத்திரிகையாளர் 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாகவும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சம் ஆகவும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.2.25 லட்சம் ஆகவும், 20 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் ஆகவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப நிதி உயர்த்தி அளிக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்பசுவாமிக்கு நினைவுத்தூண் அமைக்கப்படும். தியாகி சுப்பிரமணியசிவா கனவை நிறைவேற்றும் வகையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலயம் அமைக்கப்படும்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள மாவீரன் பூலித்தேவன் மாளிகை சீரமைக்கப்படும்.

பெரியார், அண்ணா நினைவகம் (ஈரோடு), ராஜாஜி இல்லம் (கிருஷ்ணகிரி), பிஷப் கால்டுவெல் இல்லம், (திருநெல்வேலி), தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் (நாகப்பட்டினம்), கோபால் நாயக்கர் மணிமண்டபம் (திண்டுக்கல்),

காமராஜர் இல்லம் (விருதுநகர்), முத்து மண்டபம் (வேலூர்) மற்றும் காந்தி நினைவு மண்டபம் (கன்னியாகுமரி) ஆகிய 8 மாவட்ட நினைவகங்களில் மொத்தமுள்ள 110 பழைய புகைப்படங்கள் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்படும்.

அரசு பொருட்காட்சிகளில் நடத்தப்படும் விழிப்புணர்வு நாடகங்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது பதிலுரையில் கூறியதாவது.

2016-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி பீடம் ஏறிய பிறகு, ஒரு நாள், திரைப்பட விருதுகள் தொடர்பான ஒரு கோப்பை எடுத்துக்கொண்டு போயஸ் தோட்டம் செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது.

வழக்கமாக விவரம் அறிந்து கொண்டு, கோப்பை தனது செயலாளரிடம் கொடுத்துவிட்டு போகச்சொல்வார். அன்றைக்கு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்னை அறைக்கு உள்ளே அழைத்தார்.

என்னிடமிருந்து கோப்பை பெற்றுக்கொண்ட ஜெயலலிதா, அதை பக்கத்திலிருந்த சிறிய மேஜை மீது வைத்துவிட்டு என்னை அழைத்து, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்புடன் கொண்டாட வேண்டும். ஏற்பாடுகளை உடனே ஆரம்பித்துவிடுங்கள் என்று சொன்னார்.

ஜெயலலிதாவின் ஆன்மா மகிழும்படி, அவர் இருந்தால் எப்படி நடத்தியிருப்பாரோ அப்படி தமிழ்நாட்டில் இதுவரையில் எந்த தலைவருக்கும் இல்லாத வகையில், எம்.ஜி.ஆருக்கு அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பிரமாண்டமான அளவில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் விழா நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ  பேசினார்.