சவுதி:

மெரிக்க பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சவூதி நீதிமன்றம்  5 பேருக்கு மரண தண்டனை வழங்கி உள்ளது.

சவுதி மன்னர், சல்மானின்  ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதி வந்தவர் பத்திரிகையாளர்  ஜமால் கஷோகி (வயது 59).  இவர் கடந்த ஆண்டு இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்ற நிலையில், திடீரென தலைமறைவானதாக கூறப்பட்டது.

கஷோகி, தனது துருக்கிய காதலியை திருமணம் செய்யத் தேவையான ஆவணத்தை சேகரிப்பதற் காக,  துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு  சென்ற நிலையில், அவர் மாயமானது சலசலப்பை ஏற்படுத்தியது.

கஷோகியை சவூதி அரசு அதிகாரிகள், அந்த தூதரகத்துக்குள்ளேயே வைத்து கொலை செய்யப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது. ஆனால், வெளிநாட்டு ஊடகங்கள் பல, அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று உறுதியாக தெரிவித்தன.  துருக்கி கஷோகி கொல்லப்பட்டு விட்டதாக வீடியோவும் வெளியிட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையில், சவுதி அரசாங்கத்தின் முகவர்கள் தூதரகத்திற்குள் கஷோகியைக் கொன்றனர். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மறைத்து விட்டனர். இந்தப் படுகொலை நடைபெற்று சில தினங்களுக்கு பின்னரே, உலகுக்கு தெரியவந்தது. அவரது உடலை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கஷோகி திருமணம் செய்ய இருந்ததாக கூறப்பட்ட ஹாட்டிஸ் செங்கிஸ் என்ற இளம்பெண்,  கஷோகியின் படுகொலைக்கான குற்றவாளிகள் யார் என்று இளவரசர் முகமது தன்னிடம் சொல்ல வேண்டும்.  “ஜமால் ஏன் கொல்லப்பட்டார்? அவரது உடல் எங்கே? இந்தக் கொலைக்கான நோக்கம் என்ன? ” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த கொலைக்கு சவுதி அரேபியா பொறுப்பேற்றுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்று வலியுறுத்திய துடன், இளவரசர் முகமதுவின் பங்கை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது.

இந்த படுகொலையில் 11 பேர் மீது சவுதி அரேபியா குற்றம்சாட்டி விசாரணைக்கு உட்படுத்தி வந்தது. இந்த நிலையில், தற்போது கஷோகி கொலைகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு சவுதி நீதிமன்றம்  மரண தண்டனை விதித்து உள்ளதாகவும்,  மேலும் மூன்று பேருக்கு மொத்தம் 24 ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.