டில்லி

த்திரிகையாளர்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது.

மத்திய பாஜக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் தனது பத்திரிகை சந்திப்பின் போது அறிக்கை ஒன்றை அளிப்பது மற்றும் அந்த அறிக்கையைப் படித்துக் காட்டுவது ஆகியவற்றை மட்டுமே செய்து வருகிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதை மிகவும் தவிர்த்து வருகிறார். இது பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அதிருப்தியை அளித்துள்ளது.

பல முறை பத்திரிகையாளர்கள் இது குறித்து அறிவித்துள்ளனர். ஆயினும் நிர்மலா சீதாராமன் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பு ஒரு விருந்து ஒன்றை நிதி அமைச்சகம் சார்பில் நிர்மலா சீதாராமன் அளித்தார். அந்த விருந்தை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆயினும் இது குறித்து நிதி அமைச்சகம் மற்றும் மத்திய அரசு ஒன்றும் செய்யாமல் இருந்துள்ளது.

நேற்று முன் தினம் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பை பத்திரிகையாளர்கள் புறக்கணித்துள்ளனர். இதற்கு நிர்மலா சீதாராமனின் அறிக்கையை அதிகாரிகள் படித்துக் காட்டுவார்களே தவிர கேள்விகளுக்குப் பதிலளிக்க மாட்டார்கள் எனப் பத்திரிகையாளர்கள் காரணம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பத்திரிகையாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

நிர்மலா சீதாராமனின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கேள்விகளுக்குப் பதில் அளிக்க அனுமதியைப் பெறத் தலைவர்களிடம் பேச அந்த அரங்கை விட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவருக்கு என்ன பதில் வந்தது எனத் தெரியவில்லை. அதன் பிறகு அவர் அரங்குக்குத் திரும்பாதது மட்டுமின்றி அந்த வளாகத்தில் காணப்படவில்லை.