டில்லி

சாத்வி பிரக்ஞா தாகுரின் கழிவறை குறித்த பேச்சுக்கு பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை வாசம் செய்த சாத்வி பிரக்ஞா தாகுர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவருக்கு பாஜக சார்பில் போபால் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.  அவர் திக் விஜய் சிங்கை தோற்கடித்து தற்போது மக்களவை உறுப்பினர் ஆகி உள்ளார்.

சாத்வி நேற்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் செகோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.  கூட்டம் முடிந்த உடன் அவரிடம் செய்தியாள்கர்கள் கேள்விகள் எழுப்பினர்.  அதற்கு சாத்வி, “ஒரு மக்களவை உறுப்பினருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளுடன் மட்டுமே பணி  உள்ளது.

நாங்கள் உங்களது குழிவு நீரைச் சுத்தம் செய்ய வரவில்லை.  அதைப்  புரிந்துக் கொள்ளுங்கள்.   நாங்கள் உங்கள் கழிவறைகளை சுத்தம் செய்ய இங்கு இல்லை.  நாங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக உழைக்க வேண்டும்.  அதைச் செய்ய விடுங்கள்.  இதை ஏற்கனவே நான் கூறி உள்ளேன்.  இப்போதும் சொல்கிறேன், இனியும் சொல்வேன்” என பதிலளித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது கழிவறையை சுத்தம் செய்வதற்கு ஒப்பானது என சாத்வி கூறியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.   அத்துடன் பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை சுத்தம் முக்கியமான அம்சமாக உள்ளது.   ஆகவே கட்சியின் திட்டங்களை அவர் தாக்குவதாக பாஜகவினர் கூறி உள்ளனர்.

 

இன்று பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா சாத்வியை பாஜக தலைமையகத்துக்கு அழைத்துள்ளார்.  அங்கு வந்த சாத்வியிடம் அவரது கழிப்பறை குறித்த கருத்துக்களுக்குத் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  அத்துடன் அவரது பேச்சு பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை அவமதிப்பது போல் உள்ளதாகவும் இனி அவ்வாறு பேசக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.