டில்லி

மேற்கு வங்கத்தில் பேரணி நடத்தும் பாஜக தலைவர்கள் 500 பேருக்கு அதிகமில்லாத பேருடன் நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உத்தரவிட்டுள்ளார்

மேற்கு வங்கத்தில் தற்போது 8 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.  இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன.  இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன.   இவை ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 தேதிகளில் நடைபெற உள்ளன.  அனைத்து வாக்குகளும் மே மாதம் 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.   தினசரி பாதிப்புக்கள் 2.5 லட்சத்தை தாண்டுகிறது.  உலக அளவில் இது மிகவும் அதிகமாகும்.    இதில் மேற்கு வங்கத்தில் நேற்றுவரை 6.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 10,606 பேர் உயிர் இழந்துள்ளனர்.   தற்போது தேர்தல் பிரசாரம் காரணமாக அதிக அளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர்.

எனவே அரசியல் கட்சிகள் பிரசாரத்தை நிறுத்தும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்களும் சிறிய அளவில் மட்டும் பேரணிகள் நடத்த வேண்டும் எனக் கூறி உள்ளார்.  மேலும் அவர் பேரணியில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 500க்கு மேற்படாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.