வாஷிங்டன்

மெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.  உலக அளவில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 5.79 கோடி பேர் பாதிக்கப்பட்டு 13.77 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   ஆயினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த பாதிப்பு குறித்து அதிகம் கவனம் செலுத்தாமல் உள்ளார். அதன் விளைவாக நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார்.

தேர்தலின் போது நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட டிரம்புக்கு நெருக்கமானோர் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இவர்களில் ஊழியர் தலைவர் மார்க் மெடோஸ் மற்றும் வீட்டு வசதி செயலர் பென் கார்சன் ஆகியோரும் அடங்குவர்.

ஏற்கனவே அதிபர் டிரம்ப், அவர் மனைவி மெலானா டிரம்ப் மற்றும் அவர்கள் மகன் பாரொன் டிரம்ப் ஆகியோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் மகனான ஜூனியர் டொனால்ட் டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூலை மாதம் ஜூனியர் டொனால்ட் டிரம்ப்பின் பெண் நண்பரான கிம்பெர்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.