வாஷிங்டன்:

அமெரிக்காவில் இலவச கருத்தடை திட்டத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை வாஷிங்டன் உள்ளிட்ட 13 மாநிலங்களில் செயல்படுத்த கலிஃபோரினியா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


அமெரிக்காவில் மில்லியன் கணக்கான பெண்களுக்கு இலவசக் கருத்தடை சிகிச்சை அளிக்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்தார். இதற்கு
ஒபாமா கேர் என்று பெயரிடப்பட்டது.

அந்த திட்டத்தில் பெண்களுக்கு இலவச கருத்தடை செலவை அவர்கள் பணியாற்று நிறுவனங்கள் ஏற்க வழிவகை செய்தது.

பல மில்லியன் பெண்கள் பயன் பெற்று வந்த இந்த திட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் மாற்றம் செய்தார்.

ட்ரம்பின் உத்தரவுப்படி, கருத்தடை முறைகளுக்கான காப்புறுதிச் சலுகையில் இருந்து நிறுவனங்கள் விலகிக்கொள்ளும் வாய்ப்பை அது வழங்குகிறது.
அனைத்து வர்த்தக அமைப்புகளுக்கும் அந்த மாற்றம் பொருந்தும்.

பெண்கள் கருத்தடை முறைகளுக்கு சொந்தமாகப் பணம் செலுத்திக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் பெரும் எதிர்ப்பும் எழுந்தது,
செலவுகளைக் குறைக்கும் நோக்கில் பல நிறுவனங்கள் காப்புறுதியில் இடம்பெற்றுள்ள அந்த அம்சத்தை மீட்டுக்கொள்ள மேலும் வாய்ப்பளிப்பதாக குற்றஞ்சாட்டினர்.

இருப்பினும் அது சமய ரீதியான சுதந்திரத்தை வழங்கும் விவகாரம் என்று அமெரிக்க அரசு கூறியது.
இந்நிலையில், இலவச கருத்தடை சட்டத்தை ரத்து செய்த உத்தரவு வாஷிங்டன் உட்பட 13 மாநிலங்களில் அமல்படுத்த வேண்டும் என அமெரிக்க அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து 13 மாநிலங்களில் இருந்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கலிஃபோர்னியா நீதிமன்றம், இந்த மாநிலங்களில் இலவச கருத்தடை திட்டத்தை ரத்து செய்து அமெரிக்க அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.