கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்ட விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் உத்தரவிட்டுள்ளதோடு, உயர்நீதிமன்றத்திலும் இதுபோன்ற ஊழல்கள் நடப்பதாக தனது தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழமை நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் ஊழல்கள் மற்றும் சட்ட விதி மீறல்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, தான் பணி செய்யும் உயர்நீதிமன்றத்தில் ஊழல் நடப்பது வெளிப்படையான ரகசியமாகவே இருக்கிறது என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ள பாட்னா உயர்நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதி ஒருவர், இனி எவ்வழக்கிலும் தீர்ப்புகளை வழங்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளார்.

பாட்னா உயர்நீதிமன்றத்தை சேர்ந்த 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீதிபதி ராகேஷ் குமார் வழக்குகளை விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளார். அவர் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பான வழக்கு, ஏன் அவரது அமர்வில் விசாரணைக்கு வந்தது ? என்பதற்கான பதிலை பதிவாளர் அளிக்க உத்தரவிடப்படுகிறது. தனி நீதிபதியான ராகேஷ் குமார் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்துள்ள மற்றும் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணை செல்லத்தகாதவையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதலித் விகாஸ் அமைப்பின் ஊழல் தொடர்பான வழக்கில் மாநில விஜிலென்ஸ் அமைப்பால் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கே.பி ராமய்யா, ரமாஸிஷ் பஸ்வான், எஸ்.எம் ராஜூ ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க, கீழமை நீதிமன்றம் சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ள நீதிபதி ராகேஷ் குமார், 4 கூடுதல் மாவட்ட நீதிபதிகள் இதற்கு உருதுணையாக இருந்துள்ளதாக கூறியதோடு, உயர்நீதிமன்றத்தில் இது போன்ற சட்ட விதிமீறல்களும், ஊழல்களும் வெளிப்படையாக தெரிந்த ரகசியம் போல காக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பை தொடர்ந்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தை தெளிவாக உணர்ந்த நீதிபதி ராகேஷ் குமாரை, அவர் விசாரித்த வழக்குகள் அனைத்திலும் இருந்து விலக்குவதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவில், நீதிமன்றத்தின் மாண்பை ராகேஷ் குமார் சீர்குழைத்துவிட்டதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளதோடு, எதிர்பார்க்காத ஒன்றாக இது அமைந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம், நீதிபதி ராகேஷ் குமார் விசாரித்து வந்த வழக்குகளில் இருந்து அவர் விலக்கப்பட்டிருப்பது, வழக்கறிஞர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாட்னா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சய்யா மிஷ்ரா, ”தனித்துவம் மிக்க நீதித்துறையை, வலுப்படுத்தவும், பயம் இல்லாத, நேர்மையான முறையில் நீதி கிடைத்திடவும் நாங்கள் ராகேஷ் குமாரை ஆதரிக்கின்றோம். மக்களின் கருத்துக்களை தான் தீர்ப்பில் அவர் தெரிவித்திருக்கிறார். மக்கள் விரும்பியதை எழுத்துக்களால் வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஓய்வுப்பெற்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது சட்ட விதிமீறல் புகார்களை தெரிவித்து, நடவடிக்கைக்கு எடுக்க உத்தரவிட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது இச்சம்பவம் மீண்டும் நீதித்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.