பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்கும் செலவை அமெரிக்க அரசு ஏற்க வேண்டும்: நீதிமன்றம்

கலிபோர்னியா:

பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்க ஆகும் செலவை அமெரிக்க அரசு  கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க கலிபோர்னியா  நீதிமன்றம் கூறி உள்ளது.

அமெரிக்க மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளை தடுக்கும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகள், அகதிகளின் குடும்பங்களிடம் இருந்து குழந்தைகளை தனியாக பிரித்து அடைத்து வருகின்றனர்.

அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவினை  ‘கொடூரமானது மற்றும் சட்டவிரோதமானது’ என  அமெரிக்காவின் 17 மாகாணங்கள் டிரம்புக்கு எதிராக குரல் கொடுத்து உள்ளன.

இந்த நிலையில்,  அமெரிக்கா மெக்சிகோ எல்லையில், பாதுகாப்பு அதிகாரிகளால் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்கவும், தொடர்புகொள்ளவும் இயலவில்லை என்று அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் நீதிமன்றங்களில்  பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில்  அமெரிக்க எல்லையில் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத அகதி குழந்தைகளை 30 நாட்களுக்குள் குடும்பத்துடன்  சேர்க்க வேண்டும்  அமெரிக்க நீதிமனறம் உத்தரவிட்டது.

மேலும், ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை 14 நாட்களுக்குள் அவர்களின் பெற்றோருடன் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் கலிபோர்னியா நீதிபதி டானா சப்ரா கூறியுள்ளார்.  ஜூலை 26ந்தேதிக்குள் பிரிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் அவர்களது பெற்றோருடன் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்..

இதற்கிடையில்  அகதிகளிடம் இருந்து  குழந்தைகள் பிரிக்கப்படமாட்டார்கள் என டிரம்ப் உறுதியளித்த போதிலும், டிரம்பின் இந்த உத்தரவில் ஏற்கனவே பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து டிரம்ப்  எதுவும் கூறவில்லை என்றும் வழக்கின்போது எடுத்து வைக்கப்பட்டது.

கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம், அமெரிக்க-மெக்சிகன் எல்லையில் உள்ள அதிகாரிகளால் பிரிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெற்றோருடன் இணைக்கும் செலவை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க டிரம்ப்பின் சகிப்புத்தன்மையற்ற” அணுகுமுறையின் ஒரு பகுதியாக, அகதிகளிடம் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள்  தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தற்போது குழந்தைகளையும், பெற்றோர்களையும் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் குடோன்களிலும், பாலைவன கூடாரங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.