நெட்டிசன்

பாமரன் அவர்களது முகநூல் பதிவு:

உணவுப் பொட்டலத்தைத் ”திருடி”த் தின்றார்கள் என்று சொல்லி, வட இந்தியாவில் இரு சிறுவர்களை அடித்து உதைத்து செருப்பு மாலை போட்டு இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இதைப் படித்ததும் மனது வேதனையால் கனத்தது.
.
வடக்கே அப்படி நடந்தது என்றால் தெற்கே தமிழகத்தில் நடந்த வேறொரு சம்பவம் ஏனோ நினைவுக்கு வந்தது.
.
தச்சு வேலைக்காக மதுரையில் இருந்து வந்த இளைஞன் ஒருவன் தாராபுரத்தில் பேருந்து நின்றபோது பசி தாளாமல் அங்கிருந்த கடையில் ஒரு பன்னை எடுத்துச் சாப்பிடும்போது சிக்கிக் கொள்கிறான்.
.
அடி உதையோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்ட அவனை மறுநாள் காலை மாஜிஸ்ட்ரேட் முன்பாகக் கொண்டுபோய் நிறுத்துகிறது போலீஸ்.
.
இப்போது திருப்பூர் மாவட்ட நீதிபதியாகவும் அப்போது மாஜிஸ்ட்ரேட் ஆகவும் இருந்த ஜியாபுதீன் முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.
.
போலீஸ் கூட்டிவந்த இளைஞனை ஒருபார்வை பார்த்து விட்டு “என்ன விவரம்?” என வினவுகிறார்  ஜியாபுதீன். விவரம் சொல்கிறது போலீஸ்.
.
பசிக்கொடுமையால் பன் திருடிய இளைஞனிடம் சில கேள்விகள் கேட்டுவிட்டு ”என்ன விட்டு விடலாமா?” என்கிறார் போலீசிடம்.
.
”அய்யா இவனுகள எல்லாம் உள்ள போட்டாத்தான் திருந்துவானுகய்யா…” என முனகுகிறார் இன்ஸ்பெக்டர்.
.
“அட அதில்லப்பா ஏதோ பசின்னு ஒரு பன்னைத் திருடீட்டான் அதுக்குப் போயி சிறைக்கெல்லாம் அனுப்பனுமா?” எனக்கேட்க..
.
”இல்லீங்கய்யா இன்னும் இன்வெஸ்டிகேஷன் பெண்டிங்…ல இருக்கு”ன்னு தலையைச் சொறிகிறது போலீஸ்.
.
”இதுல என்னய்யா இன்வெஸ்டிகேஷன் இருக்கு….” என்று கூறியபடி அந்த இளைஞனின் பக்கம் திரும்புகிறார் மாஜிஸ்ட்ரேட்.
.
”ஏம்ப்பா நேத்து நைட் எங்க இருந்தே?” என்று கேட்க…
.
”ராத்திரி முழுக்க ஸ்டேஷன்லதான்யா இருந்தேன்.” என்கிறான் அந்த இளைஞன்.
.
”ஆமா…. காலைல ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் போனியா?” என்று மாஜிஸ்ட்ரேட் கேட்க….
.
இதையெல்லாம் எதற்கு இவர் கேட்கிறார் என்று எதுவும் புரியாமல் ”ஆமாங்கய்யா போனேன்…” என்று சொல்லி தலையாட்ட
.
”அதெல்லாம் போன சரி…. எங்க போன?” என்கிறார் மீண்டும்.
.
”ஸ்டேஷன்லதான்யா” என்று வெட்கத்துடன் சொல்ல….
.
சிரித்தபடி போலீஸ் பக்கம் திரும்புகிறார் மாஜிஸ்ட்ரேட் ஜியாபுதீன் .

”அப்புறம் இதுல என்னய்யா இன்வெஸ்டிகேஷன் பெண்டிங்….?

அவன் பன்னு திருடுனான் சரி….  அதை உங்க ஸ்டேஷன்லயே இன்னைக்குக் காலைல வேற விதமா விட்டுட்டு வந்துட்டான்.
.
ஆக…. திருட்டுப் போன புராபர்ட்டி Recover ஆயிடுச்சல்ல…  அப்புறம் எதுக்கு ஜெயிலு?” என்று கேட்க….
.
இன்ஸ்பெக்டர் தலைசுற்றிக் கீழே விடாதபடி பிடித்துக் கொள்கிறார் கூட வந்த ஏட்டய்யா.
.
டவாலியைக் கூப்பிட்டு பன் திருடிய அந்த இளைஞனுக்கு ஒரு பெரிய சைஸ் பன்னும் குடிக்கத் தண்ணீரும் கொண்டு வர ஏற்பாடு பண்ணச் சொல்லி பணமும் கொடுத்து அனுப்புகிறார் மாஜிஸ்ட்ரேட்.
.
”இதுதான் உனக்கு தண்டனை. இந்த கோர்ட் கலையறதுக்குள்ள நீ இதை முழுசா சாப்பிட்டுட்டுத்தான் போகணும்” என்றபடி அடுத்த வழக்குக்கு நகர்கிறார் அந்த மனிதர்.
.
ஆக…
.
நீதி என்பது நாம் தேடும் சட்டபுத்தகங்களில் இல்லை.
.
அது நம் இதயங்களில் இருக்கிறது.

– பாமரன் பதிவிலிருந்து –