Random image

நீதிமன்றத்தில் தேங்கி உள்ள வழக்குகள்  குறித்து நீதிபதிகள் வருந்த வேண்டும் : கபில்சிபல்

டில்லி

நீதிபதிகள் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதற்கு வருந்தாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்கி உள்ளதற்கு வருந்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறி உள்ளார்.

தமிழக அரசு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண பாக்கி குறித்து நடைபெற்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் கீழ் நடந்தது.  அப்போது அந்த அமர்வு, “சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.   நீதிபதிகளின் கார்களில் அடையாள சின்னங்கள் இருந்தாலும் அவர்களுக்கு சுங்கச் சாவடி ஊழியர்கள் அனுமதி அளிப்பதிலை.

இதனால் நாடெங்கும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழி அமைக்க வேண்டும்.   இவ்வாறு அமைக்காத சுங்கச்சாவடிகள் மீது நெடுஞ்சாலை துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர்.   இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் புகழ் பெற்ற வழக்கறிஞருமான கபில்சிபல் தனது டிவிட்டரில், “சுங்கச் சாவடிகளில் ஒரு 15 நிமிடம் காத்திருப்பதற்கு வருந்தும் வழக்கறிஞர்கள் பல வருடங்களாக நீதிமன்றங்களில் வழக்கு தேங்கி உள்ளதை நினைத்தும் வருந்த வேண்டும்” என பதிந்துள்ளார்.