ஜூலை 1: இன்று தேசிய மருத்துவர்கள் தினம்  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 
இன்றைய இக்கட்டான காலக்கட்டத்தில்  கொரோனா  வைரஸ் தொற்று பணியில் இருந்து உலக  மக்களை காக்கும் பணியில் இரவு பகல் பாராது தடுப்பு பணியில் தீவிரப் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பத்திரிகை. காம் இணைய தளம் பெருமை கொள்கிறது.

சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப் பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors Day) ஆகும்.  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடுகின்றனர். இந்த சிறப்புமிக்க நாள் 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நினைவு நாள் கொண்டாடப்படும் தேதி காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக  தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் அயராது சேவை செய்ததற்காக கவுரவிக்கப்படு கிறார்கள். இந்த நாள் அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களுக்கும் ஒரு அஞ்சலி போன்றது.
இன்றைய இக்கட்டான காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தொற்றில் இருந்து மக்களை காக்கும் கேடயமாக, மருத்து வர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார்கள். அவர்களை கவுரவிக்கும் விதமாக இந்நாளை போற்ற வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.
தேசிய மருத்துவர் தினம், அமெரிக்காவில் இது மார்ச் 30 அன்று, ஆகஸ்ட் 23 அன்று ஈரானிலும், கியூபாவிலும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.