ஜூலை15: கர்மவீரர் காமராஜர் 118வது பிறந்த நாள் இன்று… வீடியோ

ஜூலை15: கர்ம வீரர் காமராஜர் 118வது பிறந்த நாள் இன்று. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் ஜாதிமதமற்ற சமுதாயத்தை உருவாக்க, குலக்கல்வியை முறையை ஒழித்து, அனைவரும் கல்வி கற்க ஏதுவாக முதன்முதலாக பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டுத்து, மக்கள் பணியாற்றிய பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்த நாள் இன்று.

பெருந்தலைவர்’ காமராஜரின் பிறந்தநாளை, தமிழக அரசு ‘கல்வி வளர்ச்சி நாளாக’ அறிவித்து அனைத்து கல்விக்கூடங்களிலும் ஆண்டு தோறும்  சிறப்பாக  கொண்டாடி வருகிறது.

உழைப்பால், மக்கள் பணியால்,  படிப்படியாக உயர்ந்த  காமராஜரை, தமிழக மக்கள் பெருந் தலைவர்,  கர்மவீரர், கருப்பு காந்தி, 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர்,  ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, கிங் மேக்கர்,  ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என  பல்வேறு புனைப்பெயர்களால் போற்றி வருகின்றனர்.

தென்தமிழகத்தைச் சேர்ந்த  விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மா வுக்கும் மகனாக  1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் நாள், பிறந்தார் காமராஜர்.  இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது.

நாட்டுபற்று மீது இருந்த ஆர்வம் காரணமாக அரசியலில் புகுந்து படிப்படியாக உயர்ந்து, தமிழகத்தின் தலைவராக உயர்ந்தார். மாநில முதல்வராக பதவி ஏற்று, தமிழகம் உயர பல்வேறு நலப்பணிகள் செய்தார்.

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதியவர்.

இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படுபவர் காமராஜர்.

தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றதும், முதன்முதலாக, மூதறிஞர்  ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார்.  பட்டிதொட்டி எங்கும் கல்விக்கூடங்களை திறந்து அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்க ஏதுவாக மதிய உணவுத்திட்டத்தை  நாட்டிலேயே முதன்முதலாக அமல்படுத்தினார்.

காமராசர் ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப் பட்டது. பட்டி தொட்டி எங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது, முதன்முதலாக  ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப் பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டத்தை விரிவு படுத்தினார் காமராஜர். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. பள்ளிகளில் வேலைநாட்கள் 180ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

இதன் காரணமாக,   18 லட்சம் சிறுவர்கள் படித்து வந்த தமிழகத்தில்,  34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை  உயர்த்தி சாதனை புரிந்தார்.

காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.

சென்னையில் இந்திய தொழில்நுட்ப கல்லூரி (I.I.T) தொடங்கவும் காரணமாக இருந்தார். மேலும் பல்வேறு நல்லத்திடங்களை கொண்டு வந்த பெருமை காமராஜரையே சாரும்.

இன்றும்  தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் திட்டங்கள் அனைத்தும் காமராஜர் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

 “முதியோர் பென்சன் திட்டம்” அறிவித்து ஏழை முதியோர்களின் வாழ்வில் ஒளியேற்றிய வரும் காமராஜரே.

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க  முதல்வராக கருதப்படும் ‘பெருந்தலைவர் காமராஜர்’ தமிழகத்தை  ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்தார்.  அவருடைய ஆட்சி காலமே ” தமிழகத்தின் பொற்காலம்” என்று  அழைக்கப்படுகிறது.