ஜூலை 16: சர்வதேச பாம்புகள் தினம் இன்று…

லகம் முழுவதும் இன்று சர்வதேச பாம்புகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் பெரும்பாலன பாம்புகள் விஷத்தன்மை அற்றவை என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் 2,968 வகையான பாம்புகள் இருக்கிறது. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை, கடிக்கிற எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் கிடையாது,

பாம்புகள் சுமார் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவானவை என்று அறியப்படு கிறது.  நமது நாட்டில் பாம்பினை இறைவனாக நினைத்து வழிபடுவதும் உண்டு. நாகராஜா கோவில்களும் உள்ளன.

நவக்கிரங்களிலும் ராகு, கேது போன்றவை பாம்பின் வடிவமாக கருதி இந்துக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.  நாகதோஷம் இருப்பதாக கூறி பாம்பு வழிபாடும் தொடர்ந்துகொண்டு தான் வருகின்றன.

பெரும்பாலான பாம்புகள்  மனிதனைக்கண்டு அஞ்சி ஒதுங்கியே உள்ளன. நாம் அதை சீண்டாத வரை அது யாரையும் தீண்டுவதுமில்லை, சீண்டுவதும் இல்லை. மனிதனைக் கடிப்பதென்றால் அது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே கடிக்க முயலும் அதுவும் நாம் அதை எந்தவித்த்திலாவது தாக்க முயன்றால் தான். முதலில் எச்சரிக்கை செய்யும் அதையும் தாண்டிய பின்பே கடிக்க முயல்கிறது.

நமது நாட்டில் விஷத்தன்மை உள்ள பாம்புகளாக நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன் போன்றவைகள்  கூறப்படுகிறது.

பொதுவாக   பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நாகபாம்பு தமது தலையை உயர்த்தி படம் எடுக்கும். ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வளரும். நாகபாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணத்தை ஏற்படுத்தும். இவை கைவிடப்பட்ட எலியின்வளை மற்றும் கரையான்புற்றுகளையும் வசிப்பிடமாக்கி வாழ்ந்து வருகிறது.

விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பது மிகத்தவறான கருத்தாகும்… பெரும்பாலும் உயிர்போய்விடும் என்கிற பயமே மனிதனுக்கு சாவைக்கொண்டு வந்துவிடுகிறது…

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப் பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின் றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் சுமார் முப்பதாயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் சுமார் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் சுமார் நாற்பதாயிரத்திற்கு மேல் சுருட்டை விரியன் விஷம் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

பாம்புகளும் ஆந்தைகள்போன்று எலிக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகித்து உணவுச்சங்கிலி யில் முக்கிய இடத்தில் உள்ளது.

பாம்புகள் பற்றிய பழமொழியால் அவற்றின் மீது தீரா வெறுப்பிலுள்ள நமக்கு அவற்றின் படைப்பின் காரணத்தை உணர்ந்தால் பாம்பின்மீது மரியாதையே வரும்…