ஜூலை 26: கார்கில் போர் வெற்றி தினம் இன்று

கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் கார்கில் போர் வெற்றி தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது.

கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் 20-வது ஆண்டு நினைவாக மறைந்த  ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. இந்த போருக்கு கார்கில் போர் என்ற பெயரிடப்பட்டது.

இந்த போரின்போது, நமது எல்லயை காக்க  வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கார்கில் எங்கே உள்ளது?

இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம்தான் கார்கில். இந்த நகரம் காஷ்மீர் தலைநகர்  ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் கார்கில் வழியாக செல்கிறது. இந்த பகுதியில்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது.

இந்த கோட்டின் ஒருபுறம் இந்திய வீரர்களும், மறுபுரம் பாகிஸ்தான் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாட்டு ராணுவமும் அந்த பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக எல்லையை கண்காணித்து வருகின்றனர்.

இந்த எல்லைக்கோடு பகுதியாயாக ஊடுருவி, ஸ்ரீநகர் – லே இடையே உள்ள நெடுஞ்சாலையை துண்டித்துவிட்டால், இந்தியாவை எளிதில் தாக்கலாம் என்றும், காஷ்மீர் பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து விடலாம் என்பதும்  பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தினர் மற்றும்  ராணுவத்தினரின் ஆசை.

கார்கில் போர் தோன்றியது எப்படி?

இதன் காரணமாக  1990ம் ஆண்டு முதலே, பயங்கரவாதிகளை காஷ்மீர் பகுதிக்குள்  ஊடுவ வைத்து, பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு துணைபோகிறது பாகிஸ்தான் அரசும், ராணுவத்தினரும். இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக, போர் பதட்டத்தை தவிர்க்கும் பொருட்டு  1999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக் கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தை நம்பி, இந்திய வீரர்கள் குளிர்காலத்தில் தங்களது நிலைகைளை அங்கிருந்து அகற்றி கீழே வந்தனர். இந்த சமயத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர்,  கார்கில் எல்லையிலேயே முகாமிட்டு, ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தனர்.

திடீரென, இந்திய எல்லை பகுதியை தாண்டி  காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளையும்,  கார்கிலில் ஊடுருவி  பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர். கார்கில் அருகே உள்ள  முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள்,  கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி, சியாசின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்தி புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்தனர்.

இந்த விவகாரம் தாமதமாகத்தான் இந்திய ராணுவத்தினருக்கு தெரிய வந்தது. அந்த பகுதியில் மாடு மேய்ப்பவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்திய ராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் ஷாக்கான இந்திய ராணுவம், உடனடியாக கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றனர்.  அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அவர்களில் 5 பேரை சித்திரவதை செய்து கொலை செய்தனர்.

இது இந்திய ராணுவத்தினரிடையே மேலும் அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தினருக்கு சொந்தமான ராணுவ கிடங்கை பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீசி தாக்கியது. இதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் இந்திய எல்லைபகுதிக்குள் ஊடுருவியது ஊர்ஜிதமானது.

ஆபரேஷன் விஜய்

தாய் மண்ணை காக்க கார்கில் போருக்கு வீரர்கள் தயாரானார்கள். தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. போர் நடைபெற்ற போது அந்த நேரத்தில் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அப்போது கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் துருப்புகளையும் தீவிரவாதிகளையும் இந்திய எல்லைகளில் இருந்து ஒழிப்பதற்காக ஆபரேஷன் விஜய் நடத்தப்பட்டது

இந்த கார்கில் போர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 1999-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை வரை நடைபெற்றது.

நமது ராணுவத்தினர் முதலில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தும் வகையில்,  ஸ்ரீநகர் – லடாக் தேசிய நெடுஞ்சாலையை மீட்க போராடினார்கள். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினர் மலை மீது இருந்த குண்டுமழை பொழிந்ததால், இந்திய ராணுவத்தினரால் எளிதில் முன்னேற முடியவில்லை.

சிறிது சிறிதாக முன்னேறிய ராணுவத்தினர், நெடுஞ்சாலை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் புதைத்திருந்த கண்ணிவெடிகளையும் அகற்றி மேலே சென்று பாகிஸ்தான் ராணுவத்தினரை ஓ டஓட விரட்டி தாக்கினார்கள். பாகிஸ்தான் கைப்பற்றி இருந்த ஒவ்வொரு பகுதியாக மீட்கப்பட்டது.

இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இந்திய விமானப் படை விமானங்களும் பாகிஸ்தான் நிலைகள் மீது குண்டு வீசி அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில், மிக் 27 மிக்–21 ஆகிய இரு விமானங்களை இந்தியா இழந்தது. விமானப்படை லெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இந்தியாவின் எம்.ஐ.17 என்ற விமானத்தையும் சுட்டு வீழ்த்தினார்கள்.

அதேவேளையில்  இந்திய கடற்படையினர்  கராச்சி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் மாட்டியது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் காரணமாகவும், பொருளாதா தடை காரணமாகவும்  நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது.

இந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக இழந்து வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறல் குறித்து அமெரிக்கா உள்பட ன் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தன. உடடியாக படைகளை விலக்கி கொள்ள வதாக பாகிஸ்தான் அதிபர்  நவாஸ்ஷெரீப் வெளியிட்டார்.

ஆனாலும், ராணுவத்தினர் வெளியேறியதாக கூறப்பட்டாலும், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் போர்வையில் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். அவர்களை யும் துவம்சம் செய்த இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தான் கைப்பற்றி இருந்த அனைத்து பகுதிகளையும் மீட்டு, நமது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

அதையடுத்து, போர் முடிவுக்கு வந்ததாக ஜூலை 26–ம் தேதி இந்திய அரசு  உலகுக்கு அறிவித்தது.  இந்த போரில் 527  இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும்,  1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும்  வகையில், ஆபரேஷன் விஜய் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்ட  ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.