டெல்லி:
புத்தமத துறவியான  தலாய்லாமாவின் 85வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி, உலக நாடுகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தலாய் லாமாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக  திபெத் பிரதமர் லோப்சங் சங் கேக் வெட்டி கொண்டாடினார்.
 திபெத் நாட்டை சேர்ந்தவரான தலாய்லாமா, திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்க கோரி  பல ஆண்டுகளாக சீனாவுக்கு கோரிக்கை  விடுத்து வருகிறார். அவரது கோரிக்கையை சீனா நிராகரித்ததுடன்,  திபெத் சீனாவின் ஒரு பகுதி என்று அறிவித்து உள்ளது.
சீனாவின் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த  தலாய் லாமாவை ஒடுக்கும் வகையில், அவர் தங்கியிருந்த   அரண்மனை மீதும் தாக்குதல் நடத்தியது. அவரை கைது செய்து சிறைப்படுத்த 1958- 1959ல் சீனா முயற்சித்தது. ஆனால், சீனாவிடம் இருந்து தப்பிய தலாய்லாமா,  கடந்த 1959-ம் ஆண்டு  திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தஞ்சம் புகுந்தார். அது முதல் இந்தியாவில்தான் வசித்து  வருகிறார். இந்தியா வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இன்று அவரது 85வது பிறந்தநாள்  இதையொட்டி உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.
சர்வதேச அளவில் மணல் ஓவியத்துக்கு புகழ் பெற்ற சுதர்சன் பட்நாயக் மணல் ஓவியத்தின் மூலம் தலாய் லாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திபெத் மத்திய நிர்வாகம் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து ஜூன் 30, 2021 வரை தலாய் லாமாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ”இயர் ஆப் கிராடிடியூட்’ கடைபிடிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திபெத்துக்கு தலாய் லாமா ஆற்றி இருக்கும் சேவையை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை திபெத் மத்திய நிர்வாகம் வெளியிட்டுள்ளது.