நாளை சர்வதேச யோகா தினம்: அனைத்து பள்ளிகளிலும் யோகா நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை:

நாளை சர்வதேச  யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில் யோகா நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றதும், நியூயார்க்கில்  உள்ள ஐக்கிய நாடுகள் சபையில்  யோகாவின் பெருமைகள் குறித்து பேசிய பிரதமர்,  அதை சர்வதேச அளவில் கடைபிடிக்க வலியுறுத்தும் வகையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது.  ஐ.நா.வின் அறிவிப்பை பின்பற்றி  உலக நாடுகளில்  யோகாசனம்  குறித்த விழப்புணர்வு ஏற்பட்டு  முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில்  சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள  அனைத்து பள்ளிகளிலும் நாளை யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.