சென்னை,

ஜிஎஸ்டி-ஐ நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில், வரும் 30ந்தேதி  நாடாளுமன்ற நள்ளிரவுக்கூட்டம் நடைபெறும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

ஜூலை 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஆனால், அசோசெம் போன்ற  பல்வேறு நிறுவனங்கள், வர்த்தகர்கள் ஜிஎஸ்டி அமல்படுத்துவதை ஒருசில மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசு, வரும் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டியை அமல் படுத்த உறுதியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து, ஜூன் 30ம் தேதி இரவு 11மணி முதல் ஜூலை 1ம் தேதி 12.10 மணி வரைக்கும்  நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உரையாற்றுவார் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் மட்டுமல்லாது, மாநில முதல்வர்களும் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான மாநில சட்டமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,  கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.