ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா தொடர்பானது.

இந்திய அணியில், இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற மூத்த வீரர் இஷாந்த் ஷர்மா. தனது முதல் இன்னிங்ஸை ஆடிவந்த மேற்கிந்திய தீவுகள் அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாளில் சற்று மழை பெய்திருந்தது.

எனவே, மைதானம் ஈரப்பதமாக இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டமும் முடியும் தருவாயில் இருந்தது. பந்துவீச்சில் தாக்கம் செலுத்த முடியாததால், இனி எஞ்சிய ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியுமா? என்ற நிலை இருந்தது.

அப்போதுதான் இளம் வீரரும், இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளருமான பும்ராவிடமிருந்து ஒரு ஆலோசனை வந்தது. கிராஸ் சீம் முறையில் பந்துவீசலாம் என்பதே அந்த ஆலோசனை. இதை அப்படியே அச்சுபிசகாமல் பின்பற்றிய ஷர்மா, பந்தின் தையல் பகுதிக்கு குறுக்கே வீசத் தொடங்கினார்.

விளைவு, அதுவரை 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருந்த அவரின் கணக்கில், பின்னர் 3 விக்கெட்டுகள் கூடுதலாக வந்து சேர்ந்தன. மீண்டும் ஒரு 5 விக்கெட் சாதனையை செய்தார் இஷாந்த்.

தனது 11வது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஒரு ஜுனியர் வீரர், பல டெஸ்ட் போட்டிகள் கண்ட ஒரு மூத்த வீரருக்கு சிறப்பான ஆலோசனை அளித்ததும், அதை எந்தவித ஈகோவுமின்றி ஷர்மா ஏற்றுக்கொண்டு செயல்பட்டதும் கிரிக்கெட் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.