சுமார்  300 ஆண்டுகளுக்கு இரண்டு கோள்கள் அருகருகே வரும் அதிசய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. வரும்  21ந்தேதி இந்த அரிய நிகழ்வை காணலாம் என வாலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அன்றைய தினம், வியாழன், சனி கோள்கள் அருகருகே வரும் அதிசய  நிகழ்வு நடைபெற உள்ளது.

சூரியனை,  பூமி உள்ளிட்ட 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் வியாழன். இதற்கு அடுத்த இடத்தில் சனி கிரகம் உள்ளது. இரு கிரகங்களும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களை கொண்டது. சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 14 கோடியே 72 லட்சம் கிலோ மீட்டர். இதேபோல சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தை போல 5 மடங்கு தூரத்தில் வியாழன் கிரகமும், 7 மடங்கு தூரத்தில் சனி கிரகமும் இருக்கின்றன. சூரியனை சுற்றியுள்ள ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அப்போது ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன் நேர் கோட்டில் வருவது வழக்கமானது.

அதுபோல, ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை “வியாழன் – சனி சேர்க்கை’  நிகழ்வு நடைபெற்று வருகிறது. வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 11.9 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல சனி கிரகம் சூரியனை சுற்றுவதற்கு 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும் இரு கோள்களும் 21-ந்தேதி மாலை ஒரே நேர் கோட்டில் நமக்கு காட்சி அளிக்கின்றன.

ஆனால், இந்த நிகழ்வுகள் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 21ந்தேதி  தெரியும் என கூறப்படுகிறது. ஏற்கனவே , இதே போன்று ஒரு நெருக்கமான நிகழ்வு  1623ம் ஆண்டு நடைபெற்றது. அதையடுத்து, சுமார் 300 ஆண்டுகளுக்கு  பின் தற்போது தான் நடக்கிறது. அன்றைய தினம் சனி கிரகத்தை  விட, வியாழன் கிரகம்  12 மடங்கு பிரகாசமாக தெரியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

21ந்தேதி மாலை சூரிய மறைவுக்குப்பின் அடுத்த சுமார் 45 நிமிடத்தில் இருந்து சுமார்  2 மணி நேரம் வரை இந்த நிகழ்வை காண முடியும் என்றும்,   வெறும் கண்களால் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள நாசா விண்வெளி ஆய்வு நிலையிம், இரு கிரகங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும், அவை நமது கண்ணோட்டத்தில், முழுமையாக ஒன்றுடன் ஒன்று இணைந்ததுபோன்று தோன்றும், ஒரு அரிய “இரட்டை கிரகம்”  போன்ற தோற்றத்தை உருவாக்கும்,  இருப்பினும், அவை  பார்ப்பதற்கு பூமியிலிருந்து மிக மிக மிக நெருக்கமாக தோன்றினாலும், உண்மையில், அவை இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளன என்று தெரிவித்து உள்ளது.