வெறும் 10% ஆய்வு மட்டுமே கீழடியில் நடந்துள்ளது : தொல்லியல் ஆய்வாளர்

கீழடி

தற்போது கீழடியில் வெறும் 10%ஆய்வு மட்டுமே நடந்துள்ளதாக கீழடியில் பணி புரிந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கீழடியில் நடைபெற்றுள்ள 4 கட்ட ஆய்வுகளில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.  இங்கு நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருட்களின் மூலம் தமிழ்ச்சங்க காலம் என்பது முன்பு குறிப்பிட்டதை விடப் பன்மடங்கு தொன்மையானது என தெரிய வந்துள்ளது.   அது மட்டுமின்றி தமிழக வரலாற்றையே மாற்றியமைக்கும் விதத்தில் பல புதிய பொருட்கள் கிடைக்கும் எனவும் அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கீழடியில் முன்பு பணிபுரிந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஒரு செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்,  “கீழடியில் இப்போது செய்திருக்கும் ஆய்வுகள் போதாது;   மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டும். கீழடியில் நான் பணியிலிருந்த போதே சில ஆய்வுகள் செய்யக் கோரிக்கை விடுத்து ஆனால் அது ஏற்கப்படவில்லை.   தற்போது தமிழக அரசு நல்ல முயற்சி எடுத்திருக்கிறது. இந்த ஆய்வின் மூலம் கடந்த காலம் பற்றிய புதிய தகவல் கிடைத்திருக்கின்றன.  ஆய்வுகளில் கிடைத்த பொருள்களின் காலம் கி.மு 583 என்று கூறப்பட்டாலும் அவை இன்னும் பழைமையாகவும் இருக்கக் கூடும்.

மேலும் ஆய்வு நடத்தி அதில் அடுத்தடுத்து கிடைப்பவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் முழுமையான விவரங்கள் நமக்குக் கிடைக்கும்.  ஆய்வு செய்ய வேண்டிய நிலம்  கீழடியில்  110 ஏக்கர் உள்ளது.. இதுவரை நாம் அதில் 10 சதவிகிதம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துள்ளோம்.  ஆகவே இன்னும் பல கட்ட ஆய்வுகள் அமைத்துத் தோண்ட வேண்டும். அத்தகைய ஆய்வில் எது வேண்டுமானாலும் கிடைக்கக்கூடும்.    இன்னதுதான் கிடைக்கும் என நம்மால் யூகிக்க முடியாது.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து இந்த கீழடி ஆய்வினை விரிவுபடுத்தி எந்தக் காரணம் கொண்டும் ஆய்வுகள் நிறுத்தப்படாமல் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.   நமக்கு நம்முடைய வேர்களைப் பற்றித் தெரிந்தால் மட்டுமே நாம் ஆலமரமாக நிற்பதை உணர்ந்துகொள்ள முடியும்.  நம்முடைய பழம் பெருமைகளைத் தேடிக் கண்டறியாவிட்டால், இன்னும் சில காலம் கழித்து, நம்மை யாரென்று உலகம் கேட்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

You may have missed