சினிமாவில் நடிப்பதால் மட்டுமே ஓட்டு கிடைத்துவிடாது!: சொல்கிறார் பிரபல நடிகர்

சினிமாவில் நடிப்பதால் மட்டுமே ஓட்டு கிடைத்துவிடாது என்று பிரபல தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண்  தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன்கல்யாண், ஆந்திராவில் ஜனசேனா என்ற கட்சியைத் துவங்கி நடத்தி வருகிறார். சமீபத்தில்  ஆந்திராவில் பெரும் ஊர்வலம் நடத்தி அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர்.

கடந்த தேர்தலில் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்த இவர், தற்போது அக்கட்சிக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை வந்த பவன் கல்யாண்,  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் தெரிவித்ததாவது:

“திராவிடக் கொள்கைகள் வலுப்பெற வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனைகளை வேரூண்ற வேண்டும். தென்மாநிலங்களுக்கு என்று ஒரு தலைநகரம் தேவை. இதற்காக தென்மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.

மத்திய அரசை நிர்ணயிப்பதில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநில அரசியல் முக்கிய பங்குவகிக்கின்றன. அதே போல தென்மாநிலங்கள் மத்திய அரசை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக மாற வேண்டும்.

நடிகர் என்ற பிரபலத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் ஓட்டு வாங்கிவிட முடியுமா என்பது கேள்விக்குறியே.  நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் மக்களின் செல்வாக்கைப் பெற கடினமாக உழைக்க வேண்டும்..

தேவை ஏற்பட்டால் ரஜினி அல்லது கமலுடன் கைகோத்து செயல்படுவேன். ஆனால், அப்படியொரு  நிலை ஏற்படாது.

கடந்த தேர்தலின்போது பா.ஜ.க.வுக்காக பிரசாரம் செய்தேன். ஆனால், பா.ஜ.க-வின் செயல்பாடுகளைப் பார்த்து அதிருப்தியில் இருக்கிறோம்.

2019-ல் ஆந்திர மாநில முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.

தமிழக அரசு சுயமரியாதையை மத்திய அரசிடம் அடகுவைத்திருக்கிறது” என்று பவன்கல்யாண் தெரிவித்தார்.

#votes #bavankalyan #telugu #actor #actinlg #election