அரசியலில் பட்டம் பெற்றுவிட்டார் ‘ராகுல்’: சிவசேனா புகழாரம்

டில்லி:

மோடி அரசுக்கு எதிரான நேற்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாஜ அரசை கடுமையாக விமர்சித்தார். ராகுலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி. ராகுலுக்கு புகழாரம் சூட்டி உள்ளது.

அரசியலில் பட்டம் பெற்றுவிட்டார் ராகுல்காந்தி என்றும்,  ராகுலின் இன்றைய பேச்சு ஆரம்பமே.. இது தொடரும்  என்று கூறி உள்ளது.

லோக்சபாவில்  நேற்றைய ராகுலின் பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   புள்ளி விவரங் களுடனும், ஆவேசமாகவும், அசராமலும் பேசியது பாராளுமன்ற உறுப்பினர்களிடையே வியப்பை  ஏற்படுத்தியது. ராகுலின் பேச்சுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்ற னர்.

தன்னைச் சிறுபிள்ளையாக (பப்பு) மோடி கருதுகிறார், ஆனாலும் நான் அவர் மீது வெறுப்பு கொள்ள மாட்டேன் என்றும், அவர்மீது தனக்கு மரியாதை உண்டு என்று  கூறிவிட்டு, பிரதமர் இருக்கைக்குச் சென்று  மோடியைக் கட்டித் தழுவினார். பதிலுக்கு ராகுலை அழைத்துக் கைகுலுக்கி பாராட்டினார் மோடி.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாகவும், டுவிட்டர் டிரெண்டிங்கிலும் முதலிடத்தை பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுலின் இந்த அதிரடியான நடவடிக்கை காங்கிரஸ் கட்சியின் அரசியல் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ராகுலின் பேச்சு மற்றும் நடவடிக்கை குறித்து சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின்  மூத்த தலைவர் சஞ்சய் ராவத்  செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜகவினரால் ‘பப்பு’  என அழைக்கப்பட்டவரான ராகுல்காந்தி, அந்த பட்டத்தை  தோற்கடித்து நாட்டை இயக்கும் திறன் பெற்றுவிட்டார் என்று புகழாரம் சூட்டினார்.

”மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பிரதமரை ராகுல் காந்தி கட்டிப் பிடிக்கவில்லை. மோடிக்கு ராகுல் காந்தி அளித்த மிகப்பெரிய அதிர்ச்சியாகவே பார்க்கிறோம்.

“ராகுல் காந்தி” உண்மையான அரசியலில் இருந்து பட்டம் பெற்றவர் ” என்பது தற்போது தெளிவாகி உள்ளது.  பாஜகவுக்கு இன்று கிடைத்த அதிர்ச்சியைப் போல், எதிர்காலத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை ராகுல் கொடுப்பார்.. . இது ஆரம்பம்தான்”  எனத் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா கட்சி அங்கம் வகித்து வருகிறது.  இருந்தபோதிலும் நேற்றைய  நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.