சிபிஐ இயக்குனர் நீக்கம் விவகாரம் : புதிய பதவி ஏற்க நீதிபதி மறுப்பு

டில்லி

லோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்க உதவிய நீதிபதி ஏ கே சிக்ரி தனக்கு அளிக்கப்பட்ட பதவியை ஏற்க மறுத்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அத்துடன் அவர் மீதான குற்றம் குறித்து சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு முடிவு செய்யலாம் என தீர்ப்பில் கூறப்பட்டது. ஒரு வாரம் கெடு இருந்த நிலையில் அந்தக் குழு உடனடியாக பிரதமர் மோடியால் கூட்டப்பட்டது. இந்த குழுவில் இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பதிலாக நீதிபதி ஏ கே சிக்ரியை நியமித்தார்.

இந்தக் குழுவில் இருந்த மோடி மற்றும் சிக்ரி ஆகிய இருவரும் அலோக் வர்மாவை நீக்க ஆதரவு அளித்தனர். காங்கிரஸ் தலைவரான மல்லிக்கர்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்த போதும் பெரும்பான்மை அடிப்படையில் அலோக் வர்மா நீக்கப்பட்டு தீயணைப்பு துறைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அலோக் வர்மா ராஜினாமா செய்துள்ளார்.

இன்று ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியில் அடுத்த மாதத்துடன் ஏ கே சிக்ரியின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி முடிவடைகிறது என்பதால் அதன் பிறகு அவரை லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலக நடுவர் தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்க கடந்த மாதம் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியிட்டது.

நீதீபதி ஏ கே சிக்ரி தற்போது அந்தப் பதவியை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். தற்போது தாம் சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும் அதனால் அரசு அளிக்கும் இந்த பதவியை ஏற்பது சர்ச்சைக்கு இடம் அளிக்கும் என்பதால் தாம் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.