புதுடெல்லி: உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில், சுமார் 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1 பெண் நீதிபதி இடம்பெற்றுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி.

இந்தக் கொலீஜியம் என்ற குழுதான், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் சக்திவாய்ந்த அமைப்பாகும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன்கோகாய் ஓய்வுபெற்ற நிலையில், இக்குழுவில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றார் நீதிபதி பானுமதி.

இதன்படி, இனி கொலீஜியம் குழுவில் தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ரோகிண்டன் பாலி நாரிமன் மற்றும் ஆர் பானுமதி ஆகிய 5 நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர்.

தமிழகத்‍தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி, கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நீதிபதி அனுபவம், மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் துவங்கியது. பின்னர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்று இவரின் பணிநிலைகள் மேல்நோக்கிச் சென்றன.