உச்சநீதிமன்றத்தின் ஒரு அருமையான சகாப்தம் நீதிபதி செல்லமேஸ்வர்

டில்லி

ய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தனக்குப் பின் ஒரு அருமையான சகாப்தத்தை விட்டு செல்ல உள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் பணியில் இருந்து வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார்.  தற்போதுள்ள ஐந்து மூத்த நீதிபதிகளில் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.    உச்சநீதிமன்ற நீதிபதிகளை பணி அமர்த்தும் கொலிஜியத்தில் அவர் இடம் பெற்றுள்ளார்.  வரும் ஜுன் மாதம் 22 ஆம் தேதி முதல் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள செல்லமேஸ்வரின் உச்சநீதிமன்ற சாதனைகள் சிலவற்றை இங்கு நினைவு கூர்வோம்

தேசிய நீதிபதிகள் பணி அமர்த்தும் ஆணையம் குறித்த விதிமுறை கடந்த 2014ல் அமுலுக்கு வந்தது.   அதன் மூலம் ஆணையம் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியத்தை ஒழுங்கு படுத்தியது.   இதில் செல்லமேஸ்வரின் பங்கு மிகவும் அதிகமாக இருந்தது.  கொலிஜிய முறையை மாற்றி அமைக்க வேண்டும் என முதலில் செல்லமேஸ்வர் தான் குரல் எழுப்பியவர் என்பது குறிப்பிடத் தக்கது.   அதே நேரத்தில் செல்லமேஸ்வர் பெரும்பான்மையினரின் கருத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 2015ஆம் வருடம் ஆதாருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு நாரிமன் மற்றும் செல்லமேஸ்வர் ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது.   அந்த வழக்கில் ஆதார் மூலம் தனிமனித உரிமை மீறப்படுவதாக கூறப்பட்டிருந்தது.   அதை ஒப்புக் கொண்ட நீதிபதி செல்லமேஸ்வர் ஆதாரை பல சேவைகளுடன் இணைப்பதை சட்டபூர்வமாக்கியதை நிராகரித்தார்.  அத்துடன் ஆதார் விதிமுறைகளை சீரமைக்காத வரை எந்த ஒரு சேவைக்கும் ஆதார் இணைப்பு தேவையற்றது எனவும் தனது தீர்ப்பில் அறிவித்தார்.

உச்சநீதிமன்ற வரலாற்றில் 4 மூத்த நீதிபதிகள் முதல் முறையாக செல்லமேஸ்வர் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.   கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற இந்த சந்திப்பில் உச்சநீதிமன்ற முறைகேடுகள் பலவற்றையும் தைரியத்துடன் செல்லமேஸ்வர் வெளிக் கொணர்ந்தார்.   அந்த சந்திப்பில் அவர் வழக்குகள் ஒதுக்கீடு, கொலிஜியம்,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடு குறித்து தெரிவித்தவை அனைத்தும் பரபரப்பை உண்டாக்கியது.

இதன் மூலம் செல்லமேஸ்வர் எந்த ஒரு அநியாயம் நடந்தாலும் அமைதியாக செல்லாமல் அதை எதிர்ப்பார் என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.    இதை ஒட்டி எதிர்க்கட்சியினர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார் மனுவை துணை ஜனாதிபதிக்கு அளிக்க வழி வகை செய்தது.    அத்துடன் செல்லமேஸ்வர் நீதித்துறை சம்பந்தப்பட்ட பல முறைகேடுகள் பற்றி வெளிப்படையாக பல பேட்டிகளிலும் தெரிவித்தது அவருடைய வெளிப்படை தன்மையை மக்களுக்கு உணர்த்தியது.

மேலே குறிப்பிட்டுள்ளவைகள் அனைத்தும் வெறும் எடுத்துக்காட்டு மட்டுமே ஆகும்..  உண்மையில் இது போல பல சாதனைகளை நிகழ்த்தி பணியில் இருந்து ஓய்வு பெறும் செல்லமேஸ்வருக்கு பத்திரிகை.காம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Thanx : THE QUINT