டில்லி:

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் வரும் ஜூன் 22ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். எனினும் உ ச்சநீதிமன்றத்திற்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. அந்த வகையில் நீதிபதி செல்லமேஸ்வரருக்கு இன்று தான் கடைசி வேலை நாள்.

கடைசி வேலை நாளை முன்னிட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதி சந்த்ரசுத் ஆகியோரது அமர்வில் செல்லமேஸ்வருக்கு இன்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஓய்வுபெறும் நீதிபதிக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வை பகிர்ந்து அவருக்கு கவுரம் அளிக்கப்பட்டது.

நீதிபதி செல்லமேஸ்ரருக்கு, தலைமை நீதிபதிக்கும் இடையே முக்கிய வழக்குகள் ஒதுக்கீடு செய்வது, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. எனினும் அவருக்கு பாரம்பரிய அடிப்படையில் மூத்த நீதிபதிக்கு இன்று அமர்வில் இடம் அளிக்கப்பட்டது. முன்னதாக இன்று காலை பிரிவு உபச்சார விழா நடந்த உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இதற்கான அழைப்பை செல்லமேஸ்வர் மறுத்துவிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இடம்பெறும் முதலாவது நீதிமன்றத்தில் எப்போதும் வழக்குகள் குவிந்துகிடக்கும். ஆனால் இன்று 11 வழக்குகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றது. காலை 11.15 மணிக்கு அமர்வு தொடங்கியது. மூத்த வக்கீல்கள் ராஜீவ் துத்தால பிரசாந்த் பூஷன், கோபால சங்கரநாராயணன் உள்ளிட்டோர் சிறிய அளவில் பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினர்.

நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வை முன்னிட்டு நீதிமன்ற அறையில் அதிக அளவிலான மக்கள், வக்கீல்கள், மனுதாரர்கள் கூடியிருந்தனர். அமர்வு முடிந்தது கைகளை கட்டியவாறு நீதிபதி செல்லமேஸ்வர் அறையில் இருந்து விடைபெற்றார்.