பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து, வரலாற்று சிறப்பு மிக்க தண்டனை வழங்கிய கர்நாடக மாநில நீதிபதி குன்ஹா,  ஓய்வு பெற்றார்.
தமிழக முதல்வராக 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமான ரூ 66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக திமுக தொடர்ந்த வழக்கு  பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தனிநீபதியாக நீதிபதி குண்ஹா நியமிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா வழக்கை  2003ம் ஆண்டு முதல்  விசாரித்து  வந்தார்.  18 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு,  2014-ஆம் ஆண்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.  சொத்துக்குவிப்பு வழக்கில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும்  4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பதவியில் உள்ள ஒரு முதல்வர் சிறைக்கு சென்றது இதுவே முதல் முறை என்பதால் குன்ஹா தீர்ப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதற்கு பின்னர் குன்ஹா (Justice John Michael D’Cunha)  என கூறப்படும் ஜான் மைக்கேல் டிகுன்ஹா பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்த்தப்பட்டார்.  இந்த நிலையில்,  அவரது பதவி காலம் முடிவடைந்து ஓய்வுபெற்றுள்ளார்.