தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை: நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி இந்து மல்கோத்ரா நியமனம்

புதுடெல்லி:

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவிலிருந்து நீதிபதி என்.வி.ரமணா விலகினார். அவருக்குப் பதிலாக நீதிபதி இந்து மல்கோத்ரா நியமிக்கப்பட்டார்.

நீதிபதி எஸ்ஏ. பாப்டே, நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி இந்திரா பானர்ஜி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பணி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி 2 ம்பவங்களை குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும் பிரமாண பத்திரங்களை அனுப்பினார்.

நீதிபதி இந்து மல்கோத்ரா.

இது குறித்து விசாரிக்க மூத்த நீதிபதி எஸ்ஏ. பாப்டே தலைமையில் நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமைத்தார்.

ஆனால் புகார் அளித்த பெண் சமர்ப்பித்திருந்த மனுவில், நீதிபதி ரஞ்சன் கோகாயும் நீதிபதி ரமணாவும் நண்பர்கள். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வீட்டில் நான் பணியாற்றியபோது, அவரது வீட்டுக்கு நீதிபதி ரமணா அடிக்கடி வந்துபோவார். இருவரும் நண்பர்களாக இருக்கும் நிலையில், விசாரணை நம்பகத்தன்மையாக இருக்குமா?
விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பணியிடத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவில் பெரும்பான்மை பெண்கள் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த குழுவில் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளார். தான் விசாரணைக்கு வரும்போது, வழக்கறிஞர் ஒருவரை அழைத்துவர அனுமதிக்க வேண்டும்.

விசாரணையை கேமிராவில் படம்பிடிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணைக் குழுவிலிருந்து நீதிபதி என்.வி. ரமணா விலகினார்.

இதனையடுத்து, அந்த இடத்துக்கு நீதிபதி இந்து மல்கோத்ராவை நியமித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.