கொச்சின்: கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் வி சிதம்பரேஷ், பிராமணர்களின் பண்புகள் குறித்தும், இடஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ள கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற தமிழ் பிராமணர்களின் 3 நாள் உலகளாவிய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது, “சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது தேவையற்றது மற்றும் முறையற்றது. இடஒதுக்கீடு என்பது சமூக அடிப்படையில் அமைய வேண்டுமா? அல்லது வெறுமனே சாதி அடிப்படையில் மட்டும் அமைய வேண்டுமா? என்பதை பிராமணர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது. நான் ஒரு அரசியலமைப்பு சார்ந்த பதவியில் இருப்பதால், இதுசார்ந்த எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது.

பிராமணன் என்பவன் இரு பிறப்புக் கொண்டவன். சுத்தமான பழக்கவழக்கங்கள், உயர்ந்த சிந்தனை, உத்தமமான பழக்கவழக்கம், சைவ உணவுப் பழக்கம், கர்நாடக இசையை விரும்புவது உள்ளிட்ட அனைத்து மேலான பழக்கங்களையும் கொண்டவனே ஒரு பிராமணன்.

பிராமணர்கள் வாழும் அக்ரஹாரப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கே சிறந்த கலாச்சார பாரம்பரியம் உள்ளது. பிராமணர்கள் தவிர வேறு யாரும் அங்கே குடியமர்த்தப்படக்கூடாது என்பது போன்ற கடும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசியுள்ளார்.

இன்றைய இந்து சாதிய சமூகத்தில் உச்ச இடத்தில் அமர்ந்திருக்கும் பிராமணர் என்ற அந்த பிரிவினர், தாங்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், தங்களுக்கு கீழுள்ள பெரும்பான்மையினரை நசுக்கி ஒடுக்கியே, தங்களை மேலான இடத்தில் வைத்து, சலுகைகளை அனுபவித்து வருவதை மறைத்துவிட்டு, பிராமணர்களின் பண்புகள் என்று இல்லாத விஷயங்களை இட்டுகட்டிப் பேசுவதை எதில் சேர்ப்பது? என்பதான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளன.