இந்திராபானர்ஜி உள்பட 3 புதிய நீதிபதிகள் உச்சநீதி மன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர்

டில்லி:

உச்சநீதி மன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்பட 3 நீதிபதிகளுக்கு   உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் பணியை உச்சநீதி மன்ற நீதிபதிகள் தலைமையிலான கொலிஜியம்  செய்கிறது. கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு ஏற்று அறிவிப்பானை வெளியிடுகிறது.

இந்த நிலையில், கொலிஜியம்  பரிந்துரைத்தபடி உத்தரகாண்ட் உயர்நீதி மன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் பெயரை மத்திய அரசு நிராகரித்த நிலையில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர், மீண்டும் கொலிஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து அவரது பதவு உயர்வுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியது.

அதன்படி,  புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மூன்று நீதிபதிகளும் இன்று உச்சநீதி மன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.

இதற்கிடையில்,  மூத்த நீதிபதியான கே.எம்.ஜோசப் பின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதைக் கண்டித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து மனு கொடுத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் நீதிபதி ஜோசப்பின் பெயரையே கொலிஜியம்  முதலில் பரிந்துரைத்த தால், அவர்தான் மூத்த நீதிபதி என்றும், அவருக்குத்தான்  முதலில் பதவி ஏற்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போதைய   உச்சநீதிமன்றத்தில் உள்ள 42 நீதிபதிகளில் அவரே மூத்தவர் எனும் வகையில்  முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குழு வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது.  முதலில் இந்திரா பானர்ஜிக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து,  வினீத் சரணும் கடைசியாக ஜோசப்பும் பதவியேற்றனர்.

இதன் காரணமாக  இந்திரா பானர்ஜி தான் மூத்த உச்சநீதிமன்ற நீதிபதியாக இடம் பெறுவார் என்று கூறப்படு கிறது. ஆனால், கொலிஜியம் முதன்முதலாக நீதிபதி கே.எம்.ஜோசப் பெயரை கடந்த ஜனவரி 10ந்தேதியே பரிந்துரைத்திருந்தது. அதன்பிறகு இந்திரா பானர்ஜி, வினித் சரண் ஆகியோர் பெயரை கடந்த ஜூலை மாதம் 16ந் தேதிதான் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில்  பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள்  உள்ள நிலையில், தற்போது இந்திரா பானர்ஜியுடன் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

அதுபோல உச்சநீதி மன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் 25 ஆக உயர்ந்துள்ளது.