ஸ்டெர்லைட் பலி 14ஆக உயர்ந்தது: போலீஸ் தாக்குதலில் 5 மாதமாக கோமாவில் இருந்த இளைஞர் மரணம்

தூத்துக்குடி:

ஸ்டெலைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தன மான தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது.

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் தலையில் அடிபட்டு கடந்த 5 மாதமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜஸ்டின் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த  ஸ்டெர்லைட் தாமிர ஆலை காரணமாக அந்த பகுதி மக்க ளுக்கு நுரையீரல் பிரச்சினை, கிட்னி பெயிலியர், புற்றுநோய் போன்ற  ஏராளமான நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும், நிலத்தடி நீர் அசுத்தமான நிலையிலும்,  அந்த பகுதி  மக்கள் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்த மக்கள் போராட்டம் கடந்த மே  மாதம் 22ந்தேதி விசுவரூபம் எடுத்தது. அன்று  நடைபெற்ற  மக்கள் போராட்டத்தின்போது,  காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான  துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் கை கால்களை இழந்து சிகிச்சை பெற்றனர்.

மக்கள் போராட்டத்தின் காரணமாகவே,   ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என தமிழக அரசு கடந்த மே மாதம் 28ந்தேதி  அரசாணை பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் டில்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் இன்று மேல்முறையீடு தனக்கு சாதாகமான தீர்ப்பை பெற்று வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.

அதையொட்டியே பசுமை தீர்ப்பாயம் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும், ஆலை குறித்து ஆய்வு செய்யவும் ஆணையத்தை அமைத்து விசாரித்து வருகிறது.

இதன் காரணமாக  ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில், காவல்துறையினரின் தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற இளைஞர் கடந்த 5 மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.