லைசென்ஸ் இல்லாமல் வாகனம் இயக்கி விபத்தை ஏற்பத்திய சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

சென்னை புளியந்தோப்பில் லைசென்ஸ் இல்லாத சிறுவன் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால், சிறார் நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியை சிறுவன் மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

traffiac

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி பைக் ஓட்டி, வயதான பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதனையடுத்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய புளியந்தோப்பு காவல் ஆய்வாளர், சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

வழக்கை விசாரித்த சிறார் நீதிமன்ற நீதிபதி, இது போன்ற தவறை மீண்டும் செய்யாமல் இருக்க சிறுவனுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கினார். அதன் அடிப்டையில், இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். சென்னை ஈகா தியேட்டர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று மதியம் சிறுவன் போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். இந்த தண்டனை மற்ற சிறுவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.