சென்னை:

மிழக சட்டப்பேரவை மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அதைத்தொடர்ந்து  மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன், கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயன், ப.சந்திரன்  ஆகியோர்  மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு புதன்கிழமை வரை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது

2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ஆம் தேதி தாக்கல் செய்தார். நான்கு நாள்கள் அவை நடைபெற்றபின் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர்,  சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில்  நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இன்று முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று அவை கூடியதும், மறைந்த  உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவையில் பேசிய சபாநாயகர் தனபால், பேராசிரியர் க.அன்பழகன், மொழி உரிமைக்காகப் போராடியவர்; ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற உதவியவர் என்று புகழாரம் சூட்டினார். இதையடுத்து மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய பேரவை அலுவல்கள் ஒத்திவைப்பு தமிழக சட்டப்பேரவை மீண்டும் புதன்கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது  அன்று முதல் பல்வேறு துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது புதன்கிழமை முதல் விவாதம் நடத்தப்பட உள்ளது.

இன்றைய கூட்டத்தொடர் முடிந்ததும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பேரவையில் விவாதிக்க கோரி திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.