அப்பா ராஜினாமாவுக்கும் “சர்கார்” பட விவகாரத்துக்கும் தொடர்பில்லை!: பாக்யராஜ் மகன் சாந்தனு

ர்கார் படப் பிரச்சினைக்கும் தனது தந்தை ராஜினாமாவுக்கும் தொடர்பில்லை என நடிகரும், பாக்யராஜ் மகனுமான சாந்தனு தெரிவித்திருக்கிறார்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது என நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்றிருக்கிரார் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன். இப்பிரச்சினையில் வருண் ராஜேந்திரன் பக்கம்தான் நியாயம் என்று போராடினாலும் சுமுகமாக பிரச்சினையை தீர்த்துவைத்தார் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவரும் திரைப்பட இயக்குநருமான பாக்யராஜ்.

இதற்கிடையே கதை சர்ச்சை குறித்து விளக்குவதற்காக சர்கார் படத்தின் கதையை ஊடகங்களில் தெரிவித்தார் பாக்யராரஜ். இதற்கு சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரங்கள் முடிந்த நிலையில் இன்று தனது எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்தார்.

சொல்ல முடியாத பல அசௌகரியங்களைச் சந்தித்ததாக தனது ராஜினாமா கடிதத்தில் பாக்யராஜ் தெரிவித்திருந்தார். மேலும் சர்கார் படக்கதை ஊடக பேட்டிகளில் கூறியதற்காக சன் பிக்சர்ஸிடம் மன்னிப்பும் கோரியிருந்தார். தற்போது அவரது ராஜினாமாவை எழுத்தாளர் சங்கத்தினர் ஏற்க மறுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தன் தந்தையின் ராஜினாமாவிற்கும், சர்கார் பிரச்சினைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அவரது மகனும் நடிகருமான சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு, முன்னதாக சர்கார் கதையை ஊடகங்களில் பாக்யராஜ் கூறியதற்காக தன் அப்பாவிற்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி