2வது முறை: தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து,  ஆளும் அரசான தெலுங்கான மாநில அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது.

மாநில முதல்வராக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ் 2வதுமுறையாக  மீண்டும்  பதவியேற்றுள்ளார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டு, நடைபெற்ற 2வது சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியை பிடித்து, 2வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார் சந்திரசேகர ராவ்.

119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த டிசம்பர் 7 ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 11ந்தேதி நடைபெற்றது.  இந்தத் தேர்தலில் டி.ஆர்.எஸ்., காங்கிரஸ் தெலுங்குதேசம் கூட்டணி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, பாஜக போன்ற கட்சிகள் போட்டியிட்டன.

இதில் 88 தொகுதிகளை கைப்பற்றியது தெலுங்கானா ராஷ்டிர சமிதி. இதன் காரணமாக தனிப் பெரும்பான்மை பெற்றது. அதைத்தொடர்ந்து  ஆட்சியமைக்கும் பணிகளை தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடங்கியது.

புதிய அரசு அமைப்பதற்கு ஏதுவாக பதவியை ராஜினாமா செய்தார் சந்திரசேகர ராவ். ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து டிஆர்எஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முடிவில் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  அதற்கான கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் சந்திரசேகர ராவ்வை பதவி ஏற்க அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில்  புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து இன்று பகல் 1.30 மணி அளவில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

அவருக்கு ஆளுநர் நரசிம்மன், பதவிப்பிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் குவிந்திருந்தனர்.  இதனால் பலத்த பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது.