அழகிரி-‘இன்’….அரசர்-‘அவுட்’ ராகுலிடம் போராடி சாதித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

க்களவை தேர்தல் முடியும் வரை .காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை கட்சி நிர்வாகிகளை மாற்றுவதில்லை என்ற எண்ணத்தில் தான் இருந்தார் காங்கிரஸ் தலைவர் –ராகுல்.

கே.எஸ்.அழகிரி

‘’தேர்தல் வெற்றியே தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும்’’என்பதை உணர்ந்து ஒவ்வொரு மாநிலமாக கலைப்பு- சேர்ப்பு என கட்சியை சீரமைத்து வருகிறார்-இளந்தலைவர்.

அதி முக்கியமான மாற்றம்-உ.பி.மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத்தை மாற்றியது.அவருக்கு பதிலாக அங்கு பிரியங்கா ,ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகிய இளம் வாரிசுகளை  நியமித்து  காங்கிரசுக்கு புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறார்.

இப்போது- தமிழகத்தில் ‘கை’ வைத்திருகிறார்.

மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை தூக்கி விட்டு, கே.எஸ்.அழகிரியை –அந்த நாற்காலியில் அமர்த்தி உள்ளார்.

வெற்றி இலக்கு மாத்திரம் இதற்கு காரணம் அல்ல.

திருநாவுக்கரசரை நீக்கக்கோரி-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,ப.சிதம்பரம்,கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியதே, அரசர்’-’அவுட்’செய்யப்பட்டதற்கான பிரதான காரணம்.

திருநாவுக்கரசர் வெளியேற்றப்பட்டதில் இளங்கோவனுக்கு கூடுதலாகவே பங்கு உண்டு.

திருநாவுக்கரசர்

2016-ல் இளங்கோவன் .காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட நாள் முதலாகவே இருவருக்கும்- பனிப்போர் அல்ல- பானிபட் போரே நடந்து வந்தது.

அண்மையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தடித்த வார்த்தைகளை பரிமாறிக்கொண்டதாக தெரிகிறது.

‘’உன்னை விட மாட்டேன்’’ என்று அப்போது சபதம் எடுத்து விமானம் ஏறி டெல்லி சென்றார் இளங்கோவன்.

ராகுலுடன்-வாதாடியும், போராடியும் ‘சபதம்’முடித்துள்ளார்-இளங்கோவன்.

இளங்கோவன் கலகம்- நான்கு பேருக்கு நன்மையில் முடிந்ததையும் இங்கே குறிப்பிடவேண்டும். அழகிரிக்கு துணையாக நான்கு செயல் தலைவர்களையும் ராகுல் நியமனம் செய்துள்ளார்.

அவர்கள்:

எச்.வசந்த குமார்,எம்.எல்.ஏ.

,கே.ஜெயக்குமார்,முன்னாள் எம்.எல்.ஏ.

விஷ்ணு பிரசாத்

மயூரா ஜெயக்குமார்.

இவர்களில்,வசந்தகுமார் ,முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் குமரி அனந்தனின் உடன் பிறப்பு.

விஷ்ணு பிரசாத், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகன்.

புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி யார்?

பிறந்த வருடம்-1952.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், அண்ணாமலை பல்கலை கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்.

1991 மற்றும் 96 –ல் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.2009-ல் கடலூர் எம்.பி.தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜி.கே.மூப்பனார் உயிருடன் இருந்தவரை அவரின் தீவிர விசுவாசி.

இப்போது, அழகிரியின் வழிகாட்டி – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

காங்கிரஸ் கோஷ்டிகளை ஒருங்கிணைத்தல்,தி.மு.க.வுடன் போராடி காங்கிரசுக்கு நியாயமான தொகுதிகளை வாங்குதல்,அதில் வெற்றி பெறுதல் என அழகிரிக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன.