தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பிப்.8-ல் பொறுப்பேற்கிறார் கே.எஸ். அழகிரி

சென்னை:

பிப்.8-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக  கே.எஸ். அழகிரி பொறுப்பேற்கவுள்ளார்.

இது தொடர்பாக அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவர் பருவம் முதல் காங்கிரஸில் பணியாற்றி வருகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் வரை பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு இந்த பதவியை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து சோனியா காந்தியும், தலைவர் ராகுல்காந்தியும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதன்மூலம் மக்களை திரட்டும் மகத்தான பணியை தலைவர் ராகுல்காந்தி செய்துவருகிறார். சமீபத்தில் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பின், ராகுல் தலைமையை ஏற்க நாடு முழுவதும் 22-க்கும் மேற்பட்ட கட்சிகள் தயாராக உள்ளது, தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகின்றன. இந்த அரிய பணியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

ராகுல்காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு எதிர்கால பிரதமராக அவரை மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தது எதிர்கால வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்துவிட்டது.

இதன்மூலம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 8.2.2019 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்கிறேன்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுமான சஞ்ஜய் தத், சிரிவல்லபிரசாத் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்க இருக்கிறேன்.

செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஹெச். வசந்தகுமார், கே. ஜெயக்குமார், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.