திருப்பூர்:
பெரியாரை அவதூறு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் கடுமையான சாடலுக்குபின் முதலாம் எதிரியான தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே இன்று திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜர் ஆனார் .  இரண்டாம் எதிரியான தந்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர்  பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் ஆஜராகத காரணத்தினால் வழக்கின் நகல் பெற தந்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனரும் , ரங்கராஜ் பாண்டேவும் 27/06/2016 ஆம் தேதி  நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 28.03.2015  அன்று தந்தி டிவி நெறியாளர் ரங்கராஜ்பாண்டே, கி.வீரமணியை பேட்டி கண்டார். அந்த நிகழ்ச்சியின்போது, “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை கொல்” என்று பெரியார் ஈ.வெ.ரா. கூறினார் என்பதாக பாண்டே கேள்வி எழுப்ப, அதை கி.வீரமணி மறுத்தார். இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த குமரவேலு பாண்டே மீது வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து குமரவேலுவிடம் பேசினோம். அவர்,  “அந்த நிகழ்ச்சியிலேயே பாண்டேவின் கேள்விக்கு பதில் அளித்த கி.வீரமணி, “பாம்புவிட்டுவிட்டு பார்ப்பானை கொல்” என்று பெரியார் எப்போதும் பேசவில்லை என்று ஆதாரத்துடன் மறுத்தார்.
sddefault
ஆனாலும் அந்த நிகழ்ச்சி முடிவில், அதே வார்த்தைகளை பெரியார் சொன்னதாக ஸ்லைடு போடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த நேரத்தில் இப்படி போடப்பட்டதால், அதில் கலந்துகொண்ட வீரமணி, மறுபடி விளக்கம் அளிக்க முடியவில்லை. தவிர, பெரியார் சொல்லாததை சொன்னதாக வரலாற்றை திரிப்பதும் தவறு. ஆகவே ரங்கராஜ் பாண்டே, அதே தந்தி டிவி மூலம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினோம்.
தான் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை என்று தனது வழக்கறிஞர் மூலம் பாண்டே பதில் அனுப்பினார். இதைத் தொடர்ந்து,  பாண்டே வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம்.
கோர்ட் சம்மன் அனுப்பிய போது பாண்டேவின் வழக்கறிஞர் ஆஜரானார். இந்த முறை பாண்டே ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிரப்பிக்கப்படும் என்று கோர்ட்கடுமையாக எச்சரித்தது. இதையடுத்து  இன்று பாண்டே திருப்பூர் கோர்ட்டில் ஆஜரானார்” என்றார்.
குமரவேலு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் பாண்டியனிடம் பேசினோம்,. அவர், “ வழக்கை வரும் 27ம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்திருக்கிறது. அன்று தந்தி டிவியின் இயக்குநரான  பாலசுப்பிரமணியனும் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது” என்றார்.
தந்தி டிவி தரப்பில் விசாரித்தபோது, “எந்தவித சார்பும் இன்றி நடுநிலையாக தந்தி டிவி செயல்பட்டு வருகிறது. கோர்ட் நடைமுறைகளை நாங்கள் எப்போதும் மதிப்பவர்கள். திருப்பூரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.