திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி பல்வேறு முக்கியத் தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளதாவது:

“95வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞரும் நானும் 73 வருடங்களாக நட்புடன் இருக்கிறோம்.

அவருடைய பொதுவாழ்க்கை 83 வருடங்கள்.  மாணவர் பருவத்தில் இருந்து நாங்கள் நண்பர்கள்.

கலைஞர் ஒரு பல்கலைக்கழகம். எழுத்து, பேச்சு, சட்டமன்றம், போராட்ட களம், திரைப்படம் எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர் அவர். எப்போதுமே  வருமானத்தை விட கொள்கைக்கு முக்கியம் அளிப்பவர். வறுமை காலத்தில் கூட சிறு வயதில் கொள்கைக்காக பிரச்சாரம் செய்தவர் அவர்.

1946 காலகட்டத்தில் நிறைய நாடகங்களில் நடித்துள்ளார். அப்போது பல எதிர்ப்புகளுக்கு இடையில்தான் நாடகங்களில் நடித்துள்ளார்.

தந்தை பெரியார் கலைஞருக்கு ஆறுதலாக பல சமயங்களில் இருந்திருக்கிறார்.  கலைஞர் அவர்களின் உழைப்பிற்கு ஈடு இணையே இல்லை. நெருக்கடி காலத்தில் அவர் திமுகவை சிறப்பாக கட்டிக்காத்ததை மறக்கவே முடியாது.

கலைஞரை பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி கண்ட போது, தன்னை குறித்து ஒருவரியில் குறிப்பிட்டார். தன்னை ஒரு மானமிகு சுயமரியாதைகாரன் என்று பிரகடனம் செய்து கொண்டார்.

பெரியார் மறைந்தபோது  எல்லா எதிர்ப்புகளையும் மீறி அரசு மரியாதை செலுத்த வைத்தார். பெரியருக்காக ஆட்சி கலைக்கப்பட்டாலும் கூட, எப்போதும் பெரியார் பக்கமே நிற்பேன் என்று தெரிவித்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அவர் சட்டம் கொண்டு வந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக துறையையே கொண்டு வந்தவர் இவர்.

சிறுபான்மையினருக்கு பல வாய்ப்புகளை அவர்  ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பெரியாரின் சமூக நீதிக்கு காலமெல்லாம் முக்கியத்துவம் அளித்தவர்.

கலைஞரின் இப்போதைய மவுனமே அவரது பேச்சு, அதுவே பெரிய விடை” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.