க/பெ.ரணசிங்கம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, பரவலான கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்றுவருகிறது.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக சென்று, சில காரணங்களால் அங்கேயே மரணிக்கும் சாமான்ய இந்தியர்களின் உண்மையான உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் நிலவும் பிரச்சினைகளை இப்படம் பிரதானமாக பேசியுள்ளது.
இப்படத்தில் இடம்பெறும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவின் கீழத்தூவல் மற்றும் மேலத்தூவல் என்ற கிராமங்களின் பெயர்களையும், நாயகியின் பெயர் அரியநாச்சி என்றிருப்பதையும், அவர் மிகவும் துணிச்சல்காரராக இருப்பதையும் பற்றி நாம் இங்கே எதுவும் கூறவரவில்லை. மேலும், அப்படத்தில் வரும் ரங்கராஜ் பாண்டேவின் கதாப்பாத்திரம் பற்றியும் நாம் எதையும் அலசப் போவதில்லை இங்கே.
ஆனால், படத்தின் இறுதிக் காட்சிகளில், இந்தியப் பிரதமர் மோடியை வைத்து செய்திருக்கும் காமெடியைப் பற்றித்தான் நாம் இங்கே லேசாகப் பேச வருகிறோம்!
நாட்டில் எங்கேனும் ஏற்படும் இயற்கை சீற்ற பேரழிவுகளாகட்டும், சாமான்ய மக்கள் படும் இன்னல்களாகட்டும், மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களாகட்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளாகட்டும், இவை எதற்கும் சீனிலேயே வராமல் போவதுதான் நரேந்திர மோடியின் நிரந்தர பாணி!
நடைமுறை இப்படியிருக்க, ஒரு சாமான்ய பெண்ணின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அப்பெண்ணின் துயரைக் களைவதற்காக தான் குடையைக் கூட மறுத்து வெயிலிலேயே அமர்ந்து காத்திருந்து, அதைத் தீர்த்து வைத்து, அந்தப் பெண்ணிடம் பரிவு காட்டும் மனிதராக இப்படத்தில் பிரதமர் மோடியை சித்தரித்து காமெடி செய்திருக்கிறார்கள்! ஆனால், படக்குழுவினர் இந்த வேலையை சீரியஸாக செய்திருக்கலாம்தான்! அது அவர்களுக்கான தேவையாக இருந்திருக்கலாம்! ஆனால், நமக்குத்தான் அது காமெடியாக போய்விட்டது.
ஆனால் ஒன்று, அரியநாயகி விஷயத்தில் பிரதமரின் மொழிப் பயன்பாட்டையும் நாம் கவனிக்க வேண்டும். ‘ஹிந்தி இந்தியா’ என்பதில் உறுதியுடன் இருக்கும் பிரதமர் மோடி, எந்த இடத்திலும் ஆங்கிலத்தை தவறியும் பேசாமல், தொடர்ந்து இந்தியிலேயே பேசுவதையும் இப்படத்தில் நம்மால் கவனியாது இருக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் படக்குழுவினர் உண்மையையும் கூறியிருக்கிறார்கள்!