என் தந்தையை பார்த்து காப்பியடிக்கும் காலா : ஒரிஜினல் காலாவின் மகன் பேட்டி

மும்பை

காலா திரைப்படம் தனது தந்தையின் வாழ்க்கைக் கதையை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது என தாராவியை சேர்ந்த பத்திரிகையாளர் கூறி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த பத்திரிகையாளர் ஜவகர் நாடார் காலா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.    அதில் மும்பை தாராவி பகுதியில் வாழ்ந்த தனது தந்தை திரவியம் நாடாரின் வாழ்க்கை கதையை ஒட்டி காலா திரைப்படம் எடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் தங்களுக்கு ரூ.101 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டிருந்தார்.

படம் வெளியான தினத்தில் ரசிகர்கள் ஆதரவு குறைவாக இருந்ததால் இந்த செய்தி அதிகம் பேசப்படவில்லை.    ஆனால் அதை அப்படியே அமுங்கிப் போய் விட ஜவகர் நாடார் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் அவர் சகோதரி விஜயலட்சுமி நாடார் ஆகியோர் விரும்பவில்லை.    ஏற்கனவே இந்தத் திரைப்படம் வெளியிடப்படக் கூடாது என இவர் அளித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்ட போதிலும் இவர் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளரிடம் பேசிய ஜவகர் நாடார், “நாங்கள் பணத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை.   ஆனால் இந்தப் படம் என் தந்தை திரவியம் நாடாரின் வாழ்க்கை கதையை ஆதாரமாக வைத்து தயாரிக்கப்பட்டது என்னும் ஒரு அங்கீகாரத்தை கேட்கிறேன்.    அவர் இந்தப் பகுதியில் உள்ள தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர்.   அவர் பெயரை படத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்காதது தவறாகும்.  அதனால் தான் நஷ்ட ஈடு கோருகிறோம்.

நானும் என் குடும்பத்தினரும் ரஜினிகாந்தின் ரசிகர்கள்.   எனது தந்தையின் பாத்திரத்தில் ரஜினி நடிப்பது எங்களுக்கு பெருமையே.   நான் இந்தப் படத்தை சமீபத்தில் பர்த்தேன்.   அதில் ரஜினிகாந்தை பார்க்கும் போது எனது தந்தை தான் நினைவுக்கு வந்தார்.  எனது தந்தை வெள்ளை உடை, ரஜினிகாந்த் கருப்பு உடை என்பது மட்டுமே வித்தியாசம்.    ரஜினிகாந்த் நடப்பது, “இது எங்கள் நிலம்,  எங்கள் மக்களுக்கு மட்டுமே சொந்தமான நிலம்” எனக் கூறுவது அனைத்தும் என் தந்தை அவர் வாழ்க்கையில் சொன்னது தான்.

குடும்பத்துடன் திரவியம் நாடார்

ரஜினிகாந்தை படத்தில் காலா சேட் என அழைப்பது போலவே எனது தந்தை திரவியம் நாடாரையும் இப்பகுதி மக்கள் காலா சேட் எனவே அழைத்தனர்.   தற்போதும் தாராவி மக்களைக் கேட்டால் எனது தந்தையைப் பற்றி கூறுவார்கள்.    அவர் எப்போதுமே ஒரு குடையுடன் செல்வது வழக்கம்.   அதை அப்படியே காப்பி அடித்து குடை சண்டையாக படக்குழுவினர் வைத்துள்ளனர்.  அது மட்டுமின்றி இப்பட இயக்குனர் பா ரஞ்சித் இங்குள்ள மக்களிடம் ஏற்கனவே எனது தந்தையைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்து அதை படத்தில் பயன்படுத்தி உள்ளார்.

அது மட்டும் இன்றி ரஜினிகாந்த் மனைவியாக வரும் ஈஸ்வர் ராவ் கதாபாத்திரமும் எனது தாயாருடன் மிகவும் ஒத்துப் போகிறது.   அவர் எனது தந்தைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.   இங்குள்ள பல வழக்குகளை அவர் தீர்த்து வைத்த போது என் தாயார் உடன் இருந்துள்ளார்.  ஈஸ்வரி ராவ் “ஆமாம் ஆமாம் .  சண்டை போடுவாரு, இன்னும் எத்தனை நாள் போடுவா என நானும் பார்க்கிறேன்” என சொல்வது எனது தாயார் என் தந்தையிடம் என் முன்னால் சொன்ன வார்த்தைகளே.

என் தந்தை மறைவுக்கு இந்த தாராவி மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினார்கள்.  இது நடந்து 15 வருடங்கள் கழித்து அவர் கதையை இப்படி எங்களிடம் சொல்லாமல் படம் எடுத்ததை நாங்கள் எதிர்க்கிறோம்.    இதை ஒரு வரி கூட படத்தில் சொல்லாதது எங்கள் மனதைப் புண்படுத்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கமலஹாசன் நடித்து வெளிவந்த நாயகன் என்னும் திரைப்படம் மும்பையை சேர்ந்த வரதராஜ முதலியாரின் கதை என அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thanx : Indulgexpress.com

கார்ட்டூன் கேலரி