“அம்பேத்கரை அவமானப்படுத்தும் காலா ரஜினி!” : கவிஞர் ஆவேசம்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று பல ஆண்டுகளாக நீடிக்கும் புதிருக்கு இது வரை விடை கிடைக்கவில்லை. அவரும் அரசியலுக்கு வருவேன் என்றோ, வரமாட்டேன் என்றோ நேரடியாக பதில் கூறாமல் சுற்றிவளைத்து பேசி வருகிறார்.

சமீபத்தில் ரசிகர்களுடன் நடந்த புகைப்படம் எடுக்கும் அமர்வின் போதும் இதற்கு தெளிவாக பதில் கூறாமல், போர் வரும் போது பார்ப்போம் என்று கூறி ரசிகர்களையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்.

அவர் அரசியலுக்கு வருகிறோரோ இல்லையோ..அதற்கு எதிர்ப்பு வலுவாக வருகிறது. பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான விவாதங்கள் டிவிக்களிலும் நேரிலும் நடந்து கொண்டு இருக்கிறது.

அதேபோல் அவர் அரசியலுக்கு வருவதே கேள்வி குறியாக இருக்கும் சமயத்தில், சில அரசியல் தலைவர்கள் தமிழர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று கூறுகின்றனர். ஏதோ ரஜினி அரசியலுக்கு வந்து, மக்கள் ஆதரவு பெற்று தேர்தலில் வெற்று பெற்று முதல்வர் பதவியை ஏற்பதா? வேண்டாமா? என்ற ஆலோசனையில் இருப்பது போல் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தை மட்டுமின்றி இந்திய அரசியலையும் இப்படி குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு ரஜினி தனது அடுத்த படமான ‘காலா’ படிப்பிடிப்புக்கு மும்பை புறப்பட்டு சென்று விட்டார். இந்நிலையில் காலா படம் தொடர்பான ஸ்டில்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ரஜினி கைலி கட்டிக் கொண்டு ஒரு ஜீப்பில் செருப்பு காலுடன் உட்கார்ந்திருப்பது போல் உள்ளது. அவர் உட்கார்ந்திருக்கும் ஜீப் எண் பி.ஆர் 1956 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் மறைந்த ஆண்டை குறிக்கிறது என்று புதிய சர்சை கிளம்பியுள்ளது.

அந்த நம்பர் மீது ரஜினி செருப்பு காலை வைத்திருப்பதால் அம்பேத்கரை அவமரியாதை படுத்திவிட்டதாக புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. இது தொடர்பான கண்டனங்கள் சமூக வளைதளங்களில குவிந்து வருகிறது.

இது குறித்து பிரபல கவிஞர் சுகிர்தா ராணி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு

அண்ணல் அம்பேத்கரைக் காலால் மிதிக்கும் காலா..

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் திருஉருவச் சிலைக்குச் சாதி வெறியர்கள் செருப்புமாலை போடுவதற்கும், உலகிலேயே தனித்துவமான எழுத்துகள் மற்றும் அவரின் மறைந்த நாளான பி.ஆர் 1956 மீது நடிகர் ரஜினி செருப்புக்காலை வைத்திருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எங்கள் சட்ட மாமேதையின் மீதிருந்து உங்கள் செருப்புக்காலை எடு காலா… எனக்கு இரத்தம் கொதிக்கிறது..

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.