காலா: ரஜினியை பயன்படுத்திக்கொண்ட ரஞ்சித்

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் கோவிந்தராஜன் சீனிவாசன் அவர்களது முகநூல் விமர்சனம் : 

குடிசைகளை அகற்றி நிலத்தைக் கைப்பற்றி பில்டிங் கட்டும் பில்டருக்கு துணையாய் நிற்கும் வில்லன். வில்லனுக்கு துணையாய் அரசியல், அதிகாரம். அவர்களை எதிர்த்து நிற்கும் குப்பத்து ராஜா. கதை தாராவியில் நடப்பதால், ஹீரோ காலா சேட்.

அரதப்பழசான இந்த கதைக்கு புதுரத்தம் பாய்ச்ச சூப்பர்ஸ்டார் பயன்பட்டு இருக்கிறார். ஈஸ்வரி ராய் நடிப்பு சிறப்பு. தெளிவான உச்சரிப்புடன் வசனம் பேசும் சமுத்திரக்கனிக்கு, ஒரு வார்த்தை கூட தெளிவாக பேச முடியாத வாய்ப்பு கொடுத்து ரஞ்சித் அவரை பலிகடா ஆக்கிவிட்டார். வில்லன் நானே படேகர். பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்னது போல், ரகுவரன், ரம்யா கிருஷ்ணனுக்கு பிறகு பெஸ்ட் வில்லன் ரோல். உடலின் ஒவ்வொரு உறுப்பும் நடிக்கிறது. சூப்பர் ஸ்டாரும் அதற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

குடையுடன் மழையில் சூப்பர் ஸ்டார் போடும் சண்டை, கள் குடித்து விட்டு போலீஸ் ஸ்டேஷனின் அவர் செய்யும் அலப்பறை, வாடி என் தங்கச்சிலை பாடல், முன்னாள் காதலியோடு தொடர்பு படுத்தி சூப்பர் ஸ்டார் – ஈஸ்வரி ராய் இடையேயான ஊடல் என சில காட்சிகள் மட்டும் விசில் அடிக்க வைக்கின்றன. மற்றபடி வெறும் காட்சிகளாக மட்டுமே படம் நகர்கிறது.

ரஞ்சித் படங்களில் வழக்கம்போல் வரும் டான்ஸ் குரூப் செய்யும் சேட்டைகள் படுத்துகின்றன. குடும்ப உறுப்பினர்கள் காட்சிகள் அட்டக்கத்தியை ஞாபகப்படுத்துகின்றன (சரக்கு தீர்ந்துடுச்சோ). அரிவாள், கட்டை என நேருக்கு நேராக அடித்துக் கொள்வதைக் காட்டி படத்திற்கு, U/A சான்றிதழ் வாங்கிக் கொடுததற்கு பதிலாக, பலமான வில்லனை வீழ்த்தும் வகையில், சில புத்திசாலித்தனமான ஐடியாக்களையாவது திரைக்கதையில் பயன்படுத்தி இருக்கலாம்.

தராவி குடியிருப்புவாசிகள் நிலத்தின் மீது வைத்துள்ள பற்றினைச் சொல்லும் எந்த வலுவான காட்சியும் இல்லாததால், போராட்டக் காட்சிகளில் எவ்வித ஈர்ப்பும் இல்லை. அதுவும் சமீபத்திய சூப்பர்ஸ்டாரின் தூத்துக்குடி ஸ்டேட்மென்ட்க்கு நேர் எதிரான காட்சிகள் படம் முழுக்க பரவி இருக்கிறது. கிளைமேக்ஸில், ராம்லீலா கதையை வில்லன் கேட்க, நிலத்தை கைப்பற்ற நடக்கும் போராட்டத்தில், ராவணனாய் சித்தரிக்கப்படும் காலா இறுதியில் வெற்றி பெறுகிறார்.
ரஜினி சொன்னது என்ன? படத்தில் காட்டியிருப்பது என்ன? எது அவரின் நிலைப்பாடு என்றெல்லாம் ஒரு வாரத்திற்கு டிவிக்கள் விவாதிக்க காலா கை கொடுத்து இருக்கிறது.
மொத்தத்தில் தன் கருத்தைச் சொல்ல ரஜினியை, ரஞ்சித் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

ரஜினியை மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்…

ஆனால் ரஞ்சித்தை…?

அரசியல்: சுத்தமான நகரம் என்று அடிக்கடி சொல்வது, மோடி பாணியில் கட்-அவுட்களை படம் முழுக்க காட்டுவது, இந்துத்துவ குறியீடுகளின் பின்னணியில் வில்லனைக் காட்சிப்படுத்துவது, ஸ்மார்ட் சிட்டி போன்ற மத்திய அரசின் குடியிருப்புத் திட்டங்களுக்கு எதிர்ப்பு என தனது ஐடியாலஜியை ரஜினி மீது புகுத்தி, பாஜகவும், மோடியும் தான் உங்களுக்கு எதிரி என ‘பிக்ஸ்’ செய்துள்ளார் ரஞ்சித். ரஜினியும் இதைப் புரிந்து தான் நடித்திருப்பார் என்பதால், பார்லிமென்ட் தேர்தலிலேயே தனது பங்களிப்பை செய்ய காலா தயாராகி விட்டார் என்பது ரசிகர்களுக்கான மெசேஜ்

 

கார்ட்டூன் கேலரி