விமர்சனம்:

ந்திய விமானப்படையின் பைலட் ஆன கார்த்தி, காஷ்மீரில் பணிபுரிகிறார். தனது தோழியுடன் ஜீப்பில் பயணிக்கும்போது விபத்தில் சிக்குகிறார். காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கார்த்திக்கு டாக்டரான அதிதி ராவ் ஹைதரி சிகிச்சை அளிக்கிறார்.

இருவருக்கம் காதல் மலர்கிறது..

ஹாவ்…

சின்ன சின்ன சண்டைகள்..

ஹாவ்..

ஈகோ….

ஹாவ்…

பிரிவு…

ஹாவ்…

மீண்டும் சேர்கிறார்கள்..

ஹாவ்.

– ஏன்  இத்தனை ஹாவ் ( அதான்,  கொட்டாவி) என்கிறீர்களா…?

ரோஜா, பம்பாய், அலைபாயுதே, ஓகே கண்மணி  என்று முந்தைய படங்களை நினைவுபடுத்தும்படியான காட்சிகள் என்றால் கொட்டாவி வராமல் என்ன செய்யும்?

தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துக்கொள்வது டைரக்டர் மணிரத்தினத்தின் விருப்பம், உரிமை. அதற்காக ஒரே பாணியில் காட்சி அமைப்பு, கதைக்களம் என்றால் ரசிகனுக்கு எரிச்சல்தான் வரும் என்பதையும் அவர் உணரவேண்டும்.

காட்சி அமைப்புகளும் “அய்யய்யோ” ரகம்தான்.

கார்த்தியுடன் விமானத்தில் பறக்கிறார் நாயகி அதிதி. அப்போது அவர், விபத்தில் இறந்துபோன கார்த்தியின் நண்பனது தங்கைதான் தான் என்பதைச் சொல்கிறார்.

தனது அண்ணன் விபத்தில் மரணமடைந்ததை அத்தனை அழகாக சிரித்தபடி சொல்கிறார் அதிதி.   நம்ம ரெண்டு பேரையும்,  வானத்தில் இருந்து அண்ணன் பார்த்துக்கிட்டிருப்பான்” என்கிறார் அதே சிரிப்புடன்.

உடனே கார்த்தியும் புன்னகைத்தபடி, “தேடிப் போலாமா?” என்கிறார்.

அண்ணன் மரணமடைந்த இடைத்தைப் பார்க்கும் காட்சியிலாவது கொஞ்சம் கண்ணீர் சிந்துவார் என்றால்.. ஊஹூம்…. அந்த பனி படர்ந்த லொகேசனை ரசிக்கிறார். அப்படியே காதலனுடன் காரில் சல்லாபம்.

கடவுளே!

கார்த்தியை அவரது பாணியிலேயே நடிக்க விட்டிருக்கலாம். அவரை மாதவன் போல நடிக்க வைத்திருக்கிறார் மணிர்ததினம். மீசை வழித்த அந்த முகமும்,  பழைய பாணி நடிப்பும்… ஊஹூம்.

ஹீரோயின் அதிதி ராவ் ஹைதரியின் ஓரளவு ஈர்க்கவே செய்கிறார். இயல்பாக நடிக்கவும் முயற்சித்திருக்கிறார். ஆனாலும் ஏனோ ரசிக்கவைக்கவில்லை.

கூட்டத்தில் காணாமல் போன குழந்தை மாதிரி இந்தபடத்தில் ஆர்.ஜே. பாலாஜி. கதையில் இவருக்கான ரோல் என்ன.. என்பதே புரியவில்லை.

ருக்மிணி விஜயகுமார், டில்லி கணேஷ், ஷ்ரதா ஸ்ரீநாத்  ஆகியோர் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

லொகேஷனுக்காக ஒரு சபாஷ் போடலாம். சமீபகாலமாக திரையில் காணமுடியாத, காஷமீர்.

அதோடு,காஷ்மீரின் ஜில்லிப்பை, ஒளிப்பதிவிலேயே நமக்குள் இறக்கிவிடுகிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். பாராட்டுக்கள்.

இசை – ஏ.ஆர்.ரஹ்மான். இரு பாடல்கள், தாளம்போட வைக்கின்றன.

வான் வருவான், சாரட்டு வண்டியில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

கார்கில் போர், கைதி, சிறைவாசம்.. என்பதெல்லாம் லட்டு மாதிரியான பின்னணி. அதை சரியாக இயக்குநர் பயன்படுத்தவில்லை. நம்ப முடியாத காட்சி அமைப்புகள், படத்துடன் ஒன்றவிடாமல்  தடுக்கின்றன.

மணிரத்தினம் படங்களில் ஏற்கெனவே பார்த்துப் பழக்கப்பட்ட கதாபாத்திரங்கள், அதே திரைக்கதை..!

இன்னொரு விசயம்…

படம் முடிந்தவுடன், “இது ஒரு கொரியன் சீரியலின் அப்பட்ட காப்பி”  என்று ஒரு ஹிப்பிக்கார இளைஞர் சொல்ல…  பெரியவர் ஒருவர், “அவ்வளவு தூரம் போவானேன்..  இந்தித் திரைப்படமான ஆராதனா மற்றும் அதன் தமிழ் ரீமேக் ஆன சிவகாமியின் செல்வன் பார்த்ததில்லையா” என்று கேட்டதும் காதில் விழுந்தது.

மொத்தத்தில், “படங்கள் இயக்காதபோது எத்தனை சிறப்பான இயக்குநராக இருக்கிறார் மணிரத்தினம்” என்று நினைக்கவைக்கிறது.

காற்றுவெளியிடை – புழுக்கம்.