காதல் கவிதைகள் – தொகுப்பு 1

 

பா. தேவிமயில் குமார் கவிதைகள்

 
 

காதலின் சுமை

 

காதலிக்கும் முன்
கணிக்க முடியவில்லை !
மாலைப்பொழுதுகள்
மலையளவு கனக்குமென்று
தெரிந்திருந்தால்………
காதலின் வாசலில்
தலை வைத்திருக்க மாட்டார்கள் !
காதலர்கள் !

 

காதல் பாவம்

 

காதலர் பிரிந்த
கணத்தில்
காதல்தான்
அதிகமாக அழுதது !
பாவம் …….
யார் துடைப்பாரோ ?
காதலின் கண்ணீரை !
 

சுவை

 

இனி சுவைகள்
ஏழென்று கூறுங்கள் !
காதலர்
பகிர்ந்துண்டப்
பழரசம், அமிர்தமானது !

 

மௌனம்

 

ஓயாமல் கூவிடும்
குயிலுக்கும்
தெரிந்திருக்குமோ ?
காதல் வலிகளின்
கொடுமை ….
பாவம் அதுவும்
மௌனமாகிவிட்டது !

 

வலி

 

மரணத்தின் வலியை
மரணித்தவன்
மட்டுமே உணர்வான்
அதுபோல….
காதலின் வலியை
காதலிப்பவர்
மட்டுமே அறிவர்
மற்றவர்க்கு…..
தெரிய வாய்ப்பில்லை !
 


 

சொல்லாதக் காதல்

 

கண்ணிழந்தவன் பார்த்த
கடைசி காட்சியாய்
நினைவுகள் நாளும்
நெஞ்சினுள்ளே சுற்றும் !
வெளியே செ(சொ)ல்ல
வழியில்லையே !

 

கிசு கிசு

 

காதலர்கள் சந்திக்கும் போது….
வெள்ளை சுவர்களில்
வெற்றிலை துப்பியது போல,
தாறுமாறு செய்திகள்
தடுமாறுகிறது ஊருக்குள்ளே !

 

துரோகம்

 

நீங்காத வலியாய்…..
ஏமாந்த மனதில்…..
அடிப் பிடித்தப்
பாத்திரத்தின்
நறுமணம் போல
“நாறுகிறது” காலத்திற்கும்,
காதலின் நினைவுகள் !

 

மறுப்பு

 

காலப்போக்கில்
ஏற்கப்பட்ட, சில
மாற்றங்களை
ஏனோ…. சில
மனிதர்கள், இன்னும்
ஏற்க மறுக்கிறார்கள்,
அதில் முதலாவது
“காதல் திருமணம்”

 

காதற்ற ஊசி

 

கல்லறை செல்லும் வரை
காதலிப்பவர்க்கும்
காதற்ற ஊசி வராது !
ஆனால்….
காதல் வந்துவிடும்
கண்டிப்பாக சொர்க்கத்திற்கு !

 

– பா. தேவிமயில் குமார்