காதல் கவிதைகள் – தொகுப்பு 6

 

பா. தேவிமயில் குமார் கவிதைகள்

 

இரட்டிப்பு

 

உன்னுடன்

இன்று வரை

சொல்ல முடியாதக்

கவிதைகள் எல்லாம்

காதலாகக்

கனத்துவிட்டது

இதயத்தில் !

இரட்டிப்பாகவே !

என்னுள்  நீ, என்றும்

இருப்பதால்

உன் வலிகளையும்,

என் வலிகளாகவே

எண்ணி அனுபவிக்கிறேன் !

 

தலையாட்டி

 

திருமணத்திற்குப் பின்

ஒருநாள்

நானும் ஒரு பெண்ணும் என

நிதானமாக ஆரம்பித்தாய்,

காதலித்தோம்,

கதை பேசினோம்,

காற்றில் பறந்தோம்,

கசந்தது காதலென்றும்,

காதல் அரக்கன், அவள் அப்பனென்றும்,

உன் காதலைப் பேசினாய் !

பேசிய பின், மெதுவாக

நீ, காதலித்திருக்கிறாயா ? என

நிதர்சனமாய்க் கேட்டாய் !

“இல்லையென”

மௌனமாகத் தலையாட்டினாள்,

மௌனம் கலையாதப் புதுப்பெண் !

உன் முகம் ஒளிர்ந்ததை

அவள் பார்த்தபின்

எண்ணினாள்,

இது தான் நீ எதிர்பார்த்த

பதிலென்று ! ஆண் சொல்லலாம்

பெண் சொன்னால்….??

 

கதைகள்

 

நம்மைப் பற்றிய

கதைகள்

நாளுக்கு நாள்

கூடிக்கொண்டேப் போகிறது !

ஆனால் நீயோ

இன்றாவது,

இப்போதாவது

சொல்வாய் என

செவி சாய்க்கிறேன் !

வழக்கம் போல

வருகிறேன் என

சொல்லிவிட்டு

செல்கிறாயே !

நாளையாவது

சொல்லிவிடேன்

நாம் “காதலர்களென”

நானாவது

தெரிந்துகொள்கிறேன்

குறைந்தபட்சம்

நம் உறவு எதுவென ?

சொல்லிவிடேன்,

 

முழுமை

 

மூன்றாம் பாலினத்தின்

முழுமையானக்

காதல் வலிகளையும்

கன்னி(ண்ணி)ய உணர்வுகளையும்

கதையிலும், கவிதையிலும்,

பதிவு செய்தால்

மட்டுமே, நம் இலக்கியம்

முழுமைபெறும் தோழர்களே !

 

காதலின் மரணம்

 

உன்னைப் பார்ப்பதற்கு

முன்னாலே

அவளை(னை)ப் பார்த்திருந்தால்

அவ(ளோ)னோடு  தான்

என் வாழ்க்கை,

அமைந்திருக்கும் என்று சொல்லும்

அந்த நொடியிலேயே

கேட்பவரின்

காதல் மரணிக்கிறது !

 

குடை

 

ஓயாமல் பெய்திடும்

அந்த மழையில்

உனக்கும், எனக்குமாய்

ஒரு குடை மட்டுமேக்

கிடைத்தது !

அட,

அதுவும் விரிய மறுக்கிறதே !

அதற்குத் தெரியும்,

இந்த முதல் மழை

இப்பொழுது நமக்கானதென !

கைப்பையினுள்

குடையை வைத்துவிடு !

கதகதப்பாய் அது

கண்மூடி உறங்கட்டுமே !

ஆனால்…..

நாம் நனைந்திடலாம் வா !

 

அனுமதி

 

கடவுளைக் காதலிக்க

கடவுச்சீட்டு கொடுத்த சமூகம்,

மனிதர்களுக்கு

மறுப்பு சொல்வதேன் ?

காதலிக்கும் எல்லோருக்கும்,

காதலிக்க

கடவுள் கிடைப்பதில்லையே !

 

தவிப்பு

 

காதல் வேண்டாமென்றாய்,

சரி என்றேன் !

நண்பர்களாக மட்டுமாவது

நாமிருக்கலாம் என்றேன் !

நட்புடன் மறுத்தாய் !

நீ சொல்வது சரிதான்,

காதலுக்குப் பிறகான

உறவுகள், உறக்கமில்லாத

கவலைகளைத் தரும் !

கை கூப்பி கேட்கிறேன்

கொன்று விடாதே, காதலே !

சென்றுவிடு, மீண்டும் வராதே !

 

கடவுள் பாவம்

 

கடவுள் எப்போதுமேக்

காதலிடம் தோற்றுக்

கொண்டே, இருக்கிறார் !

கடவுளை விட மனிதர்கள்

காதலையே அதிகம்

கொண்டாடுகிறார்களாம்

கடவுள் பாவம்தானே ?

 

ஈவா ஹிட்லர்

 

மனித வேட்டையாடியவனின்

மனதை வேட்டையாடினாய் !

வேண்டியதெல்லாம் வென்றவன்,

வேண்டி நின்றான் உன் காதலை !

கொடூரனின் மனப்பக்கங்களில்

காதலைப் படித்தவள் நீ !

நரகம் தான் எனத் தெரிந்தும், காதலின்

நரபலிக்காக நீயே சென்றாய் !

கடைசி நொடியில்கூட, காதலனின்

கைப்பிடிக்க காதலுடன் நின்றாய் !

உன் காதலனை என்றென்றும் இந்த

உலகம் ஏசிக்கொண்டே இருக்கும் !

ஆனால்……. ஈவா,

உலகம் உன்னை மட்டும்,

இன்றல்ல, என்றென்றும் சொல்லிடும்

“காதல் தேவதை” என்றே !

 

– பா. தேவிமயில் குமார்