Random image

காதல் கவிதைகள் – தொகுப்பு 7

 

காதல் கவிதைகள் – தொகுப்பு 7

 

பா. தேவிமயில் குமார் கவிதைகள்

 

நினைவு

 

புரிந்து கொள்ள

முடியாத

புத்தகங்களின்

பக்கங்களைத்

திருப்பும்போது

தவறாமல்

ஏனோ….

உன் நினைவுகள் !

 

வெட்கம்

 

காதல் வந்த வேளையில்

வெட்கத்தைத் தேடினேன் !

வெட்கமோ, நான், சற்று

வெளியே சென்று வருகிறேன் என

வேகமாய் சென்றது !

இப்போதாவது நாம்

இருவரும் மனம் விட்டுப்

பேசமுடியுமா ? எனக் காதல்

பரிதாபமாய்க் கேட்டது !

 

பயம்

 

உன் தோழியை

அன்று அறிமுகப்படுத்தியபோது,

அவளை தங்கையெனவும்,

என்னை அண்ணனெனவும்,

ஆயிரம் முறை

அழுத்தம் திருத்தமாய் சொன்னதைக்

கேட்டு….

காதல் தலைகுனிந்து !

சந்தேகம் இப்போதே வந்துவிட்டதென !

 

அவளுக்கான….. ஆசை, காதல்

 

அவளுக்காக, அவள் மூச்சு விட்டு

எத்தனை யுகங்கள் ஆனது !

அடைக்கப்பட்டிருந்த கதவுகளின்

உள்ளே என்ன யோசித்திருப்பாள் ?

ஜன்னல் வழியே சென்ற

காற்றிடம் என்ன பேசியிருப்பாள் ?

அகப்பையிடமும், ஆட்டுக்குட்டியிடமும்

அவளின் ஆசைகளைத் தெரிவித்திருப்பாளோ ?

காதல் எனும் அனுபவத்தை எண்ணிட

காலமில்லாமல் பிள்ளைகளைப் பெற்றிருப்பாளோ ?

ஆழ்மன ஆசைகளையெல்லாம் தன்

ஆன்மாவில், அடைத்து வைத்திருப்பாளோ ?

பாவம் தான்…..

எங்களின் பாட்டிமார்கள், பிள்ளைபெறும்

எந்திரங்களாகவே வாழ்ந்து செத்தார்கள் !

இதில் எங்கே காதலிக்க நேரம் ?

 

24 மணி நேரம்

 

உறங்கும் முன்

உன் நினைவுகளை

உதாசீனப் படுத்த முடியவில்லை !

காலை எழுந்தவுடன்

கண்கள்,

தினசரியில் உனக்கான

ராசி பலனைத்

தேடுகிறது !

என்ன செய்வேன் ?

இந்த காதலின் துவக்கத்தை ?

 

எடுத்துக்காட்டு

 

பிரபஞ்சத்தின்

கருந்துளைக்குள்

போகும் எதுவும்

காணாமல் போகுமாம் !

அதற்கு

காதலே சிறந்த

எடுத்துக்காட்டல்லவா ?

எந்த மனிதரும்

அதனுள் சென்று

இன்னும் திரும்பவில்லையே !

 

ரசிப்பு

 

காதலர்களாக சேர்ந்து

என்னை,

கண்டுகளித்தவர்கள்,

கணவன், மனைவியான

பிறகு ஏனோ

கண்டுகொள்ளவில்லை !

காதலிக்கும் போது

மட்டும் நான் வேண்டுமா ?

மனசு விட்டுப் புலம்புகிறது

“நிலா”

 

வாடகை மகிழ்ச்சி

 

கட்டணக் கனவும்,

கட்டாயக் கற்பனையும்,

கண்மூடியவுடன் காதலும்,

வாடகை மகிழ்ச்சியும்,

வண்ண நினைவுகளையும்

வாரிக் கொடுக்கிறது திரைப்படங்கள் !

கொடுத்து விட்டுப் போகட்டுமே !

காதலிக்கும் யோகம்

எல்லோருக்கும் கிடைக்காதே !

கனவுகளிலாவது காதல் செய்து

களிப்படையட்டும் இதயங்கள் !

 

வழிவிடுவோம் !

 

அழகிய ஆண்மகன்,

அன்பானத் திருடன்,

எனக்காக வாழ்பவன்,

என்னைத் தாங்குபவன்,

கவிதைகள் பாடுபவன்,

காதலோடு அணைப்பவன்,

என் ஏகபத்தினி விரதன்,

எனக்கு மட்டுமானவன்,

என் ப்ரியங்களின் வங்கி,

எனக்கான பிரித்விராஜன்,

புன்னகையைத் தருபவன்,

பெரும் காதல் இளவரசன்,

என ஏராளமாய்……

கனவுகள் காண்பார்கள்

கன்னிப் பெண்கள் !

சில நடக்கும், சில நடக்காது

இருந்து விட்டுப் போகட்டுமே !

அதை அப்புறம் பார்க்கலாம் !

இப்போது அவளை

இன்பக் கனவுகள் காண

வழிவிடுவோம் ! கனவுகளில்

வாழட்டும் அவள்

கனவு வேறு, வாழ்க்கை வேறு என

காலங்களுக்குப் பின் புரிந்துகொள்வாள் !

இப்போது அவள்

இன்பமாய்க் கனவு காணட்டுமே !

 

நிதானம்

 

ரணப்படுத்தியும்

நரக வேதனைப்படுத்தியும்

பார்த்த காதல்,

வேகமாக சென்றுவிட்டது,

பின்

குணப்படுத்துகிறேன்

என்று மெதுவாக

எட்டிப் பார்த்து,

நிதானமாக

மருந்திடுகிறது !

காதலே, உன் உண்மையான

முகமெது ?

 

– பா. தேவிமயில் குமார்