காதல் கவிதைகள் – தொகுப்பு 9

 

காதல் கவிதைகள் – தொகுப்பு 9

 

பா. தேவிமயில் குமார் கவிதைகள்

 

ரிமோட்

 

காதல் திருமணங்களினால்

கலவர பூமியான, இடத்தைக்

கடந்து செல்லும்போது,

கனக்கிறது, இதயம் !

அடுத்தடுத்த, நாட்களில்

அடுத்த செய்தியை அறிந்திட,

ஆர்வமாய்,

அரக்க, பரக்க, தேடுகிறோம்

“ரிமோட்” எங்கென்று,

இவ்வளவுதான் மனிதமோ ?

 

நியாயமற்றவன்

 

ஒவ்வொரு இரவினையும்

ஒளிரச் செய்கிறாய்

ஆம், விழித்திருக்கிறேன் !

வருகின்ற பகலையெல்லாம்

வண்ணமற்றதாய் மாற்றினாய்

ஆம், விழித்திருக்கும் போதே

உறங்குகிறேன் !

இறைவா ! ஏன்

காதலர்க்கு மட்டும்

காலத்தை மாற்றியமைத்தாய் !

போடா, நீ நியாயமற்றவன்

 

அமைதி

 

நீண்ட

காத்திருப்புக்கும்,

கவலைகளுக்கும்,

பின்னானக்

காதல்,

கலவரத்துக்குப்

பின்னான

ஊரடங்கைப் போல

அமைதி தரும் !

 

முன், பின்

 

காதலிக்கும் போது

காதல் வெற்றிபெற

காதலுக்காக வாதிட்டோம் !

கல்யாணத்திற்குப்

பின்னும்

வாதிடுகிறோம்,

எங்களுக்குள்ளே,

அது…….

காதலைத் தவிர்த்த

மற்றவற்றிற்காக !

 

பயிற்சி

 

வார்த்தைகளை

வடிவமைத்தேன்

உன்னுடன் பேசிட,

ஒத்திகை

ஒருமுறைப்

பார்த்தேன்

உன்னுடன் சிரித்திட,

உன்னை

எவ்வளவு அதிகமாக

விழுங்கிட வேண்டுமென

கண்களுக்குப் பயிற்சியளித்தேன்

ஆனால்….

அன்றோ,

தூரத்திலிருந்து

ஒரு புன்னகையாலே

இருவரும்

விடை பெற்றதை

என்னவென்று சொல்ல

 

ஒருநாள்

 

முகமூடியில்லாமல்,

மௌன கீதங்களாய்,

மழலை வாழ்த்துக்களோடு,

ஒப்பனையில்லாமல், யார்

ஒப்புதலுமில்லாமல்,

ஆரவாரமில்லாமல்,

ஆபரணங்களில்லாமல்,

நிதானமாக,

நிறைய மகிழ்வோடு,

எனக்காக

ஒரு நாள் வாழ்ந்து

பார்க்க வேண்டும் !

எனவே….

நீங்கள் திருமணம்

செய்து கொள்ளுங்கள்

என பொம்மைகளிடம்

புலம்பிக் கொண்டிருந்தது

“திருமணம்”

 

வியாபாரி

 

அங்கொருவன்

காதலர்களை

விற்பனை

செய்கிறான், பாவம்

கூண்டுக்கிளிகள் !

 

காதல் திருமணம்

 

திருமண விருந்தில்

தித்திப்புடன்

பசியாறியது, காதல் !

 

பட்டறை

 

சங்கிலியாக

சுண்டு விரல்கள்

உபயம், திருமணத்தில்

ஹோமத்தீ !

 

வாழ்த்து

 

மெருகேற்றிய

அட்சதை அரிசி

ஆனந்தத்துடன்

மிதிபடுகிறது

மணவறையில் !

 

– பா. தேவிமயில் குமார்