கதிராமங்கலத்தில் 9வது நாளாக கடையடைப்பு!! வைகோ, பழ.நெடுமாறன் ஊர்வலமாக செல்ல திட்டம்

தஞ்சை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த மாதம் 30ந்தேதி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே போடப்பட்டு இருந்த முள்செடிகளில் மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறி கடந்த 1ந்தேதி முதல் கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 9வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், டிராபிக் ராமசாமி உள்பட பலர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்த வகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் குடந்தையில் இருந்து நாளை ஊர்வலமாக சென்று கதிராமங்கங்கல மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.